மஹுவா மொய்த்ரா எம்.பி. பதவிநீக்கம் தொடர்பான பரிந்துரை அறிக்கை மக்களவையில் தாக்கல்

அறிக்கையின் நகலைக் கோரி திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் முழக்கங்களை எழுப்பினர்.;

Update:2023-12-08 13:01 IST

புதுடெல்லி,

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, அதானி நிறுவனங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப கோடிக்கணக்கான ரூபாய் லஞ்சமாக பெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக நாடாளுமன்ற நெறிமுறைக்குழு மஹுவா மொய்த்ராவிடம் விசாரணை நடத்தியது. இதன் முடிவில் அவரை எம்.பி. பதவியில் இருந்து நீக்க வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரைத்து இருக்கிறது.

இந்த பரிந்துரை அறிக்கை மக்களவையில் வெள்ளிக்கிழமை(இன்று) தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மக்களவையில் தாக்கல் செய்யப்படும் பரிந்துரை அறிக்கைக்கு பெருவாரியான உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தால், மஹுவா மொய்த்ரா எம்.பி. பதவியில் இருந்து நீக்கம் செய்யப்படுவார்.

இந்த நிலையில் இன்று மக்களவையில் கேள்வி நேரம் தொடங்கியபோது, மஹுவா மொய்த்ரா எம்.பி. மீதான பரிந்துரை அறிக்கை குறித்து காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்ச்ன் சவுத்ரி குறிப்பிட்டு பேசினார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் ஓம் பிர்லா, இந்த விவகாரம் பட்டியலிடப்பட்டுள்ளதாகவும், கேள்வி நேரத்தின்போது இது தொடர்பாக விவாதிக்கலாம் என்றும் கூறினார்.

இதனிடையே எதிர்கட்சி எம்.பி.க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் பகல் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார். தொடர்ந்து மக்களவை கூடி விவாதம் நடைபெற்றது. அப்போது நெறிமுறைக் குழுவின் தலைவர் வினோத் குமார் சோன்கர், மக்களவையில் மஹுவா மொய்த்ரா பதவிநீக்கம் தொடர்பான பரிந்துரை அறிக்கையை தாக்கல் செய்தார்.

இந்த அறிக்கையின் நகலைக் கோரி திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் முழக்கங்களை எழுப்பினர். அறிக்கையின் பரிந்துரைகள் வாக்கெடுப்புக்கு விடப்படுவதற்கு முன்பு அதன் மீது விவாதம் நடத்த வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி கோரிக்கை விடுத்தார். இதனிடையே எதிர்கட்சியினரின் தொடர் அமளிக்கு மத்தியில் அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்