குடிநீர் குழாயில் உடைப்பை சீரமைக்கும் பணி
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக குடிநீர் குழாயில் உடைப்பை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
சரவணம்பட்டி
'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக குடிநீர் குழாயில் உடைப்பை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
குடிநீர் குழாயில் உடைப்பு
கோவை-சத்தி தேசிய நெடுஞ்சாலையில் சரவணம்பட்டி பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சாலை விரிவாக்க பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் சரவணம்பட்டி ஆனந்தகுமார் மில் பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் மரங்களின் வேர்களை அகற்றும் பணி நடைபெற்றது.
அப்போது அங்கிருந்த அத்திக்கடவு பிரதான குடிநீர் குழாயில் திடீரென்று உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறி ஓடியது. இதனால் சரவணம்பட்டி, சிவானந்தபுரம், விநாயகபுரம், சின்னவேடம்பட்டி, எல்.ஜி.பி. நகர் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது.
புகைப்படத்துடன் செய்தி
இது குறித்து நெடுஞ்சாலை துறை மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். ஆனால் உடைப்பை சரி செய்ய அன்று மாலை வரை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று தெரிகிறது.
இது குறித்து 'தினத்தந்தி' நாளிதழில் புகைப்படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக நேற்று காலை அத்திக்கடவு கூட்டு குடிநீர் திட்ட உதவி செயற்பொறியாளர் ராதா மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். ஆனால் நெடுஞ்சாலை துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் யாரும் வர வில்லை.
சீரமைக்கும் பணி
ஆனாலும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், மாநகராட்சி கவுன்சிலர்கள் சிவா என்ற பழனிசாமி, பூங்கொடி சோமசுந்தரம் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து பொக்லைன் எந்திரம் அங்கு வரவழைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள், குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 3 மணிக்கு உடைந்த குழாயை சீரமைக்கும் பணி முடிவடைந்தது. அதன்பிறகு குடிநீர் வினியோகம் தொடங்கியது.