செல்லூர் கண்மாய், குலமங்கலம் சாலை ரூ.6 கோடியில் சீரமைப்பு- கோ.தளபதி எம்.எல்.ஏ. தகவல்
செல்லூர் கண்மாய் கரை மற்றும் குலமங்கலம் சாலை ரூ.6 கோடியில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக கோ.தளபதி எம்.எல்.ஏ. தெரிவித்து உள்ளார்.
செல்லூர் கண்மாய் கரை மற்றும் குலமங்கலம் சாலை ரூ.6 கோடியில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக கோ.தளபதி எம்.எல்.ஏ. தெரிவித்து உள்ளார்.
பாதாள சாக்கடை பணி
மதுரை மாநகராட்சி செல்லூர் கண்மாய் அருகில் உள்ள குலமங்கலம் சாலையில் பாதாள சாக்கடை குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. சுமார் ஒரு ஆண்டுக்கு மேலாக இந்த பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டு உள்ளது. இந்த குலமங்கலம் சாலை, செல்லூர் கண்மாயில் இருந்து தொடங்கி முடக்கத்தான், ஆலங்குளம், ஆனையூர் சந்திப்பு, கலை நகர் சந்திப்பு, பனங்காடி, லட்சுமிபுரம், ஆலங்குளத்தில் நிறைவடைகிறது. மிக முக்கியமான இந்த சாலையை பணியினை மாநகராட்சி மிக மெத்தனமாக செய்து வந்தது. இது குறித்து பொதுமக்கள் பலரும் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. கோ.தளபதியிடம் முறையிட்டனர்.
அதனைத்தொடர்ந்து எம்.எல்.ஏ. கோ.தளபதி, இந்த சாலையை சீரமைக்கும் பணி குறித்து நேற்று ஆய்வு செய்தார். அப்போது மாநகராட்சி கமிஷனர் சிம்ரன் ஜீத் சிங், நகர் பொறியாளர் அரசு ஆகியோரும் உடன் இருந்தனர்.
சீரமைப்பு
அப்போது இந்த சாலையை போர்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என்றும், செல்லூர் கண்மாய் கரையை சீரமைக்க வேண்டும் என்று கோ.தளபதி உத்தரவிட்டார். அதன்படி, புதிய சாலை விரைவாக போடப்படும் என்று மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து கோ.தளபதி கூறியதாவது:-
மதுரை செல்லூர் கண்மாய், குலமங்கலம் பகுதியில் சுமார் 1,200 மீட்டர் தூரம் உள்ளது. இந்த கரை முழுவதும் ரூ.4 கோடியில் சீரமைக்கப்பட உள்ளது. அதற்காக அங்கு நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கு வசதியாக பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்படும். தடுப்பு வேலி அமைக்கப்படும். அதே போல் செல்லூர் கண்மாய் பகுதியில் செல்லும் குலமங்கலம் சாலை ரூ.2 கோடியில் சீரமைக்கப்படும். இன்னும் 10 நாட்களில் இந்த பணியினை முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.6 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.