காவலாளியை தலைகீழாக கட்டி வைத்த மரம் அகற்றம்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், காவலாளியை தலைகீழாக கட்டி வைத்த மரம் வெட்டி அகற்றப்பட்டது சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Update: 2022-10-30 18:45 GMT

கோத்தகிரி, 

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், காவலாளியை தலைகீழாக கட்டி வைத்த மரம் வெட்டி அகற்றப்பட்டது சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

காவலாளி ஓம்பகதூர்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா ஆகியோருக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் உள்ளது.

இங்கு 24.4.2017-ந் தேதி காவலாளி ஓம்பகதூரை ஒரு கும்பல் கொலை செய்தது. அவரை அங்குள்ள மரத்தில் தலைகீழாக கட்டி வைத்து விட்டு, மற்றொரு காவலாளியான கிருஷ்ண தாபாவை தாக்கியது. மேலும் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக கேரளாவை சேர்ந்த சயான், வாளையாறு மனோஜ் உள்பட 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே வழக்கை தீர விசாரித்து உண்மையை வெளியே கொண்டு வர கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதையடுத்து 230-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

மரம் அகற்றம்

இதைதொடர்ந்து வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றப்பட்டது. கடந்த 26-ந் தேதி சி.பி.சி.ஐ.டி. டி.ஜி.பி. ஷகில் அக்தர் தலைமையில் அதிகாரிகள் கோடநாடு எஸ்டேட்டில் ஆய்வு செய்தனர். எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்த இடம், கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் எஸ்டேட்டிற்குள் அத்துமீறி நுழைந்த 9 மற்றும் 10-வது நுழைவுவாயில்கள் உள்ள இடங்கள் மற்றும் எஸ்டேட் பங்களாவிற்குள் சென்று, கொள்ளை நடந்த அறைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் எஸ்டேட் காவலாளியான ஓம்பகதூரை கொலை செய்து விட்டு, தலைகீழாக கட்டி வைத்திருந்த மரம் வெட்டி அகற்றப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த விசாரணையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மழையின் போது அந்த மரம் விழுந்த காரணத்தால், மரத்தை வெட்டி அகற்றி விட்டு, புதிய மரக்கன்று நட்டு வைத்து உள்ளதாக நிர்வாகம் விளக்கம் அளித்ததாக தெரிகிறது.

இந்த மரத்தை வெட்ட முறையான அனுமதி பெறப்பட்டதா என்பது தெரியவில்லை. இருப்பினும், கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில், தடயம் (மரம்) அகற்றப்பட்ட சம்பவம் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்