கச்சிராயப்பாளையம்
கச்சிராயப்பாளையம் அருகே மாதவச்சேரி கிராமத்தில் உள்ள ஒட்டன் தாங்கள் ஓடையை சிலர் ஆக்கிரமித்து வீடு மற்றும் சுற்றுச்சுவர் கட்டி இருந்தனர். இதனால் விவசாய நிலத்திற்கு தண்ணீர் செல்வதில் தாமதம் ஏற்பட்டு வந்ததால் ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி சென்னை ஐகோர்ட்டில் சமூக ஆர்வலர்கள் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணையின் முடிவில் ஆக்கரமிப்புகளை அகற்ற கோர்ட்டு உத்தரவிட்டது. அதன் பேரில் சின்னசேலம் தாசில்தார் அனந்தசயனன், வருவாய் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையினர் பொக்லைன் எந்திரம் மூலம் ஒட்டன் தாங்கள் ஓடையில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் மற்றும் சுற்றுச்சுவர்களை அப்புறப்படுத்தினர். அசம்பாவிதங்களை தடுக்க கச்சிராயப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.