அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கம்: ஆபத்தான சூழலை உருவாக்கும் வன்மம் கொண்ட செயல் - முத்தரசன் கண்டனம்

செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்திருப்பதாக கவர்னர் அறிவித்திருப்பது ஆபத்தான சூழலை உருவாக்கும் வன்மம் கொண்ட செயல் என்று முத்தரசன் கூறியுள்ளார்.

Update: 2023-06-29 16:58 GMT

சென்னை,

செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்திருப்பதாக கவர்னர் அறிவித்திருப்பது அனைத்து எல்லைகளையும் தாண்டி ஆபத்தான சூழலை உருவாக்கும் வன்மம் கொண்ட செயலாகும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையின்படி மக்கள் வாக்களித்து தேர்வு செய்து, அமைக்கப் பெற்றுள்ள சட்டமன்றத்தின் அரசியல் அதிகாரத்தையும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, அரசியல் அமைப்பு அதிகாரம் கொண்ட அமைச்சரவையினையும் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி பொறுப்பேற்ற ஆரம்ப நாளில் இருந்தே அலட்சியப்படுத்தியும், சிறுமைப்படுத்தியும் வருகிறார்.

எதிர்கட்சி நிலையில் இருந்தாலும் ஒன்றிய அரசுடன் இணக்கமான நல்லுறவு நீடிக்க வேண்டும் என்ற முறையில் தமிழ்நாடு அரசு, கவர்னரின் ஆத்திரமூட்டலுக்கு ஆளாகாமல், ஜனநாயக நெறிகளை பின்பற்றி, சட்ட வழிமுறைகளை அனுசரித்து பொறுமையுடன் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், அமலாக்கத்துறையின் நடவடிக்கையால் உடல் நலம் பாதிக்கப்பட்டு, உயிராபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் வி.செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்திருப்பதாக கவர்னர் அறிவித்திருப்பது அனைத்து எல்லைகளையும் தாண்டி ஆபத்தான சூழலை உருவாக்கும் வன்மம் கொண்ட செயலாகும்.

அரசியலமைப்பு சட்டத்தின்படி அமைச்சரவையின் ஆலோசனைகளை ஏற்று செயல்பட வேண்டிய கவர்னர், சட்டத்திற்கு மேலாக தன்னை நிறுத்திக் கொண்டு, எல்லையில்லா அதிகாரம் கொண்டவராக கருதி செயல்படுவது தமிழ்நாட்டின் அமைதி வாழ்வை சீர்குலைக்கும் அரசியல் சதி விளையாட்டின் வடிவமாகும். கவர்னரின் மலிவான அரசியல் நடவடிக்கையை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிப்பதுடன் மலிவான அரசியல் செயலில் ஈடுபட்டு வரும் ஆர்.என். ரவியை கவர்னர் பொறுப்பில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்ற மாபெரும் மக்கள் இயக்கத்தில் ஜனநாயக சக்திகள் ஒன்றுபட்டு களம் இறங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்