நீர்ப்பிடிப்பு பகுதியில் கட்டிய 17 வீடுகளை அகற்றும் பணி தொடங்கியது
கலசபாக்கம் அருகே நீர்பிடிப்பு பகுதியில் கட்டப்பட்ட வீடுகளை இடித்து அகற்றும் பணி தொடங்கியது.
கலசபாக்கம்
கலசபாக்கம் அருகே நீர்பிடிப்பு பகுதியில் கட்டப்பட்ட வீடுகளை இடித்து அகற்றும் பணி தொடங்கியது. அதனை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி வேனில் ஏற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
33 வீடுகளை அகற்ற உத்தரவு
கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் காஞ்சி பஞ்சாயத்துக்குட்பட்ட சுண்ணாம்பு கால்வாய் நீர் பிடிப்பு பகுதியில் 33 வீடுகள் கட்டப்பட்டிருப்பது அதிகாரிகள் ஆய்வில் தெரியவந்தது.
இதனையடுத்து அந்த வீடுகளை அவர்களாகவே அகற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடந்த மாதம் நோட்டீஸ் அனுப்பினர். ஆனால் அதிகாரிகள் விடுத்த கால கெடுவுக்குள் அந்த வீடுகள் அகற்றப்படவில்லை.
இதனை தொடர்ந்து போளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு குமார், கடலாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்
பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ஹரிஹரன் தலைமையில் ஊழியர்கள் பொக்லைன் எந்திரங்களுடன் அங்கு வந்தனர்.
அப்போது அங்கிருந்த பொதுமக்கள், ''நீர்ப்பிடிப்பு பகுதியில் மொத்தம் 33 வீடுகள் வருகிறது. என்று கடந்த வாரம் சொன்னீர்கள். ஆனால் தற்போது 17 வீடுகள் தான் வருகிறது.
மற்ற 16 வீடுகள் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் வருவதால் அதை விட்டுவிட்டு எங்கள் வீட்டை மட்டும் இடிப்பது எந்த விதத்தில் நியாயம்'' என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் தாசில்தார் முனுசாமி அங்கு வந்து பொது மக்களிடம் காஞ்சி கரைகண்டேஸ்வரர் கோவில் அருகே தோப்பு புறம்போக்கு உள்ளது. அங்கு 6 பேருக்கு பட்டா வழங்கப்படும். அனைவரும் கலைந்து செல்லுங்கள். வீட்டை இடிக்க வேண்டும். இது கோர்ட்டு உத்தரவு என்று கூறினார்.
அப்போது கலெக்டர் வந்தால் தான் இதற்கு தீர்வு கிடைக்கும் எனக்கூறி இளைஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
குண்டுக்கட்டாக தூக்கினர்
இதனை தொடர்ந்து தாசில்தார் முனுசாமி அங்கு உள்ள விநாயகர் கோவிலில் அனைவரையும் அமர வைத்து அனைவருக்கும் மாற்று இடம் வழங்க ஏற்பாடு செய்வதாக கூறினார்.
பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் வீடுகளை இடிக்க தொடங்கினர் அப்போது வீட்டின் உரிமையாளர்கள் எங்கள் உயிர்போனால்தான் வீடுகளை இடிக்க முடியும் என்று கூறி வீட்டை இடிக்க விடாமல் பொக்லைன் எந்திரம் முன் நின்றனர்.
அவர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கிச் சென்று போலீஸ் வேனில் ஏற்றி அடைத்தனர். அதன்பின்னர் ஒவ்வொரு வீடாக இடித்து அகற்றும் பணிநடந்தது.
இதனால் காலை முதல் இரவு வரை அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.