வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்த தமிழர் குடும்பத்திற்கு நிவாரணம்: முதல்-அமைச்சர் அறிவிப்பு
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழர் குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
சென்னை,
கேரளாவின் வயநாடு பகுதியில் நேற்று முன்தினம் இரவு மிகக் கனமழை பெய்தது. இந்த கனமழையை தொடர்ந்து நேற்று அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவுகளால் வைத்திரி, வெள்ளேரிமலை, மேப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் பயங்கர பாதிப்பு ஏற்பட்டது. இதனால், தனித்தீவில் சிக்கியது போல 500 வீடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் மாட்டிக்கொண்டனர்.
இந்த சூழலில் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை தற்போது 163 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களை ஹெலிகாப்டர் மூலமாக மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பலர் மாயமாகி உள்ளதால் பலி எண்ணிக்கை உயரலாம் என்று அஞ்சப்படுகிறது. இதனிடையே நிலச்சரிவில் சிக்கி மேலும் ஒரு தமிழர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "கேரள மாநிலம், வயநாடு மாவட்டம், சூரல்மலையில் பணியாற்றிவந்த நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டம், சேரங்கோடு 1 கிராமம், கொல்லிஅட்டி, அம்பேத்கர் நகரைச் சேர்ந்த திரு.கல்யாணகுமார் (வயது 52) த/பெ. முருகையா என்பவர் நேற்று (30.07.2024) அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
இச்சம்பவத்தில் உயிரிழந்த திரு.கல்யாணகுமார் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், காலம்சென்ற திரு.கல்யாணகுமார் அவர்களின் குடும்பத்தினருக்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நேற்று தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தார். உயிரிழந்த காளிதாஸ் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.