தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு நிவாரண பொருட்கள் கப்பல் மூலம் இன்று அனுப்பப்படுகிறது
தூத்துக்குடியில் இருந்து கப்பல் மூலம் 16 ஆயிரத்து 600 டன் நிவாரண பொருட்கள் கப்பல் மூலம் இன்று அனுப்பப்படுகிறது
தூத்துக்குடியில் இருந்து கப்பல் மூலம் 16 ஆயிரத்து 600 டன் நிவாரண பொருட்கள் கப்பல் மூலம் இன்று அனுப்பப்படுகிறது.
நிவாரண பொருட்கள்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு அங்குள்ள மக்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தில் இருந்து அத்தியாவசிய பொருட்கள் தமிழகத்தில் இருந்து அனுப்பப்படும் என தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி சென்னை துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் கடந்த மே மாதம் 18-ந்தேதி முதல் கட்டமாக ரூ.30 கோடி மதிப்பிலான பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அந்த கப்பலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
இதன் தொடர்ச்சியாக 2-ம் கட்டமாக கடந்த மாதம் 22 ந் தேதி அன்று தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் ரூ.67.70 கோடி மதிப்பிலான 15 ஆயிரம் டன் எடையுள்ள பொருட்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டன.
இன்று
இதனை தொடர்ந்து 3-வது கட்டமாக நிவாரண பொருட்கள் இன்று (சனிக்கிழமை) தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்படுகிறது.
ரூ.54 கோடி மதிப்பிலான 16,356 டன் அரிசி, ரூ.6 கோடி மதிப்பிலான 201 டன் ஆவின் பால் பவுடர், ரூ.14 கோடி மதிப்பிலான 39 டன் உயிர் காக்கும் மருந்துகள் என மொத்தம் ரூ.74 கோடி மதிப்பிலான 16,596 டன் எடையுள்ள பொருட்கள் கப்பலில் ஏற்றப்பட்டு உள்ளன.
பொருட்களை கப்பலில் ஏற்றும் பணிகளை தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் என்.பி.ஜெகன் ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அமைச்சர்கள்
இதனை தொடர்ந்து பொருட்கள் ஏற்றப்பட்ட கப்பல் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து இன்று காலை 10 மணிக்கு புறப்பட்டு கொழும்பு துறைமுகத்துக்கு செல்கிறது.
இந்த கப்பலை கனிமொழி எம்.பி., தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தமிழக உணவு துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் கொடியசைத்து அனுப்பி வைக்கின்றனர்.