முதல்-அமைச்சருக்கு அறிக்கை அனுப்பி, உரிய நிவாரணம் வழங்கப்படும்-பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ.

பயிர் பாதிப்பு குறித்து கணக்கெடுக்கும் பணி முடிந்த உடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அறிக்கை அனுப்பப்பட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. கூறினார்.

Update: 2023-02-04 19:30 GMT

பயிர் பாதிப்பு குறித்து கணக்கெடுக்கும் பணி முடிந்த உடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அறிக்கை அனுப்பப்பட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. கூறினார்.

அறுவடை பணிகள் பாதிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் பெய்த மழையால் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டன. மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை ஆய்வு செய்து சேதம் குறித்து கணக்கெடுப்பு நடத்தி விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் லட்சுமிகாந்தம் தலைமையில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூர், மன்னார்குடி, குடவாசல் உள்ளிட்ட 10 வட்டாரங்களில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

திருவாரூர் வட்டாரத்தில் பின்னவாசல், வேப்பூர், வஞ்சிபூர், கீழகூத்தங்குடி, வடகரை, புலிவலம், பள்ளிவாரமங்கலம், கள்ளிகுடி, கானூர் உள்ளிட்ட பகுதிகளில் வேளாண் உதவி இயக்குனர் ஹேமா ஹெப்சிபா நிர்மலா தலைமையில் அதிகாரிகள் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர்.

கணக்கெடுக்கும் பணி

நேற்று 2-வது நாளாக வருவாய் மாவட்ட அலுவலர் சிதம்பரம், பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. மற்றும் வேளாண் அதிகாரிகள் வடகால், பின்னவாசல், ஓடாச்சேரி, கீழகூத்தங்குடி, வேப்பத்தாங்குடி, ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தனர். அப்போது பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. கூறுகையில், 'எதிர்பாராதவிதமாக கடும் மழை பெய்த காரணத்தினால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மிகுந்த சேதமடைந்துள்ளது. 20 நாட்கள் கழித்து அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களும் சேதமடைந்துள்ளது. சேதமடைந்த நெற்பயிர்களை மாவட்ட நிர்வாகம் மற்றும் வேளாண்மை துறை மூலம் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிந்த உடன் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அறிக்கை அனுப்பப்பட்டு, பயிர்பாதிப்புக்கு உண்டான நிவாரணம் வழங்கப்படும்' என்றார். அப்போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) ஏழுமலை, வேளாண்மைத்துறை உதவி இயக்குனர் ஹேமா ஹெப்சிபா நிர்மலா, தாசில்தார் நக்கீரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கருணாகரன், திருவாரூர் ஒன்றியக்குழு துணைத்தலைவர் துரைதியாகராஜன் மற்றும் பலர் உடன் இருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்