திருப்பூர் காப்பகத்தில் உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண உதவி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

திருப்பூர் காப்பகத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்டதால் உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண உதவி வழக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2022-10-07 10:17 GMT

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியில் விவேகானந்தா சேவாலயம் என்ற தனியார் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கெட்டுப்போன உணவை சாப்பிட்டதால், இந்த காப்பகத்திலிருந்த 14 குழந்தைகளுக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில், அதில் மூன்று சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சூழலில், இதுதொடர்பாக சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் விவேகானந்தா சேவாலயத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் காப்பகத்தில் உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண உதவியை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக செய்தி மக்கள் தொடர்பு துறை வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது,

திருப்பூர் மாவட்டம், அவினாசி வட்டம். ராக்கியாபாளையம் கிராமம் மஜரா திருமுருகன்பூண்டியில் செயல்பட்டுவரும் தனியார் குழந்தைகள் காப்பகத்தில் தங்கி கல்வி பயின்று வந்த மாணவர்களில் மாதேஷ் (வயது 15). பாபு (வயது 13) மற்றும் ஆதிஷ் (வயது 8) ஆகிய மூன்று சிறுவர்களும் காப்பகத்தில் உணவு உட்கொண்ட பின்னர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் 6.10.2022 அன்று மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லும்போது வழியிலேயே இறந்துவிட்டனர் என்ற வேதனையான செய்தியினைக் கேட்டு மிகுந்த துயருற்றேன்.

உயிரிழந்த பிள்ளைகளின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும். ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். சிகிச்சையிலுள்ள சிறுவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி வழங்க அறிவுறுத்தியுள்ளேன்.

உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் இரண்டு இலட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்