32 மாணவர்களின் தேர்வு முடிவு வெளியீடு

பிளஸ்-2 தேர்வில் விடை எழுத ஆசிரியர்கள் உதவிய விவகாரத்தில், 32 மாணவர்களின் தேர்வு முடிவு வெளியிடப்பட்டு உள்ளது. இதில் 31 பேர் தேர்ச்சி பெற்றனர்.

Update: 2023-05-16 20:45 GMT

ஊட்டி

பிளஸ்-2 தேர்வில் விடை எழுத ஆசிரியர்கள் உதவிய விவகாரத்தில், 32 மாணவர்களின் தேர்வு முடிவு வெளியிடப்பட்டு உள்ளது. இதில் 31 பேர் தேர்ச்சி பெற்றனர்.

விடை எழுத உதவி

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே அரசு உதவி பெறும் சாம்ராஜ் பள்ளியில் கடந்த மார்ச் மாதம் 27-ந் தேதி பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கான கணித பாடத்தேர்வு நடந்தது. அப்போது சில மாணவர்கள் விடை எழுதுவதற்காக, கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் உதவியதாக புகார் எழுந்தது.

இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர் முனியசாமி தலைமையில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அறை கண்காணிப்பாளர்களாக பணிபுரிந்த ராம்கி, மூர்த்தி, முதன்மை கண்காணிப்பாளராக பணியாற்றிய ராதாகிருஷ்ணன், வழித்தட அலுவலராக பணியாற்றிய சீனிவாசன் மற்றும் செந்தில் ஆகிய 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

மாணவர்கள் அதிர்ச்சி

இதற்கிடையே கடந்த 8-ந் தேதி வெளியான பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவில், அந்த பள்ளியில் தேர்வு எழுதிய 34 மாணவர்கள் கணித பாடத்தில் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் 2 மாணவர்கள் மட்டுமே முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், இதனால் மற்ற மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் பெற்றோர் குற்றம் சாட்டினர். அதன்பின்னர் நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முனியசாமி, கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பூபதி மற்றும் அதிகாரிகள், அந்த பள்ளிக்கு சென்று 34 மாணவர்கள், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 5 ஆசிரியர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அதன் அறிக்கையை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

தேர்வு முடிவு வெளியீடு

இந்த விவகாரத்தில் முடிவு எடுக்க தாமதம் ஆனதால், மாணவர்களின் மேற்படிப்பு பாதிக்கப்படுவதாக கூறி நேற்று முன்தினம் பெற்றோர் மற்றும் மாணவர்கள் ஊட்டி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது இதுகுறித்து சென்னை தேர்வு துறை இயக்ககம் விசாரணை நடத்தி வருகிறது. ஓரிரு நாட்களில் தீர்வு காணப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

இந்தநிலையில் நேற்று சாம்ராஜ் பள்ளியில் பிளஸ்-2 கணித தேர்வு எழுதிய 2 மாணவர்களை தவிர, 32 பேரின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. சென்னை தேர்வு துறை இயக்ககம் மூலம் தேர்வு முடிவு விவரம் பள்ளி மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட்டது. தொடர்ந்து பள்ளி அறிவிப்பு பலகையில் தேர்வு முடிவுகள் ஒட்டப்பட்டது. மேலும் மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதில் ஒரு மாணவர் தோல்வி அடைந்தார். மற்ற 31 பேரும் கணித பாடத்தில் தேர்ச்சி பெற்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்