உடலை வாங்க மறுத்து திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் உறவினர்கள் போராட்டம்

விக்கிரமங்கலத்தில் போலீசார் தாக்கியதில் விவசாயி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி, அவரது உடலை வாங்க மறுத்து திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

Update: 2022-12-09 18:04 GMT

விக்கிரமங்கலத்தில் போலீசார் தாக்கியதில் விவசாயி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி, அவரது உடலை வாங்க மறுத்து திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

போலீசார் தாக்கினர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தாலுகா விக்கிரமங்கலம் அருகே காசாங்கோட்டையை சேர்ந்தவர் செம்புலிங்கம் (வயது 54). விவசாயி. இவருக்கு சுதா என்ற மனைவியும், மணிகண்டன் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இதில் மகளுக்கு திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். இந்தநிலையில் அரியலூரில் கடந்த மாதம் 26-ந்தேதி நடந்த ஒரு அடிதடி வழக்கில் செம்புலிங்கத்தின் மருமகன் அருண்குமார் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்தார். இது தொடர்பாக விக்கிரமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது செம்புலிங்கம் மற்றும் அவர் குடும்பத்தினரை விக்கிரமங்கலம் போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது.

சாவு

இதில் படுகாயம் அடைந்த செம்புலிங்கம் அரியலூர் அரசு ஆஸ்பத்திரியில் 3 நாட்களாக சிகிச்சை பெற்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட விவசாயி செம்புலிங்கம் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைதொடர்ந்து செம்புலிங்கம் இறந்த சம்பவம் குறித்து அவருடைய உறவினர் அளித்த புகாரின் பேரில் செம்புலிங்கத்தை தாக்கிய 8 போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெறுகிறது.

இந்த நிலையில் நேற்று செம்புலிங்கத்தின் உறவினர்கள் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியினர் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து ஆர்.டி.ஓ. தவச்செல்வத்திடம் கோரிக்கைகளை வலியுறுத்தினர். அப்போது போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் செம்புலிங்கத்தின் உடலை திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் வேறு மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் குழுவினர் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். அதனை வீடியோ எடுத்து பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

இதையடுத்து செம்புலிங்கத்தின் உறவினர்கள் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து தங்களது கோரிக்கையை வலியுறுத்தினர். இதற்கு திருச்சி அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் மறுப்பு தெரிவித்தனர். உடனே செம்புலிங்கத்தின் உறவினர் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியினர் என 50-க்கும் மேற்பட்டோர் அரசு ஆஸ்பத்திரி முன்பு சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அவர்களை தடுத்து பேச்சுவார்தை நடத்தினர். இந்த சம்பவத்தால் திருச்சி அரசு ஆஸ்பத்திரி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து செம்புலிங்கத்தின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்