இலங்கை தமிழர்களுக்கு 321 வீடுகளுடன் மறுவாழ்வு முகாம்

திண்டுக்கல்லை அடுத்த தோட்டனூத்தில் ரூ.17 கோடியில் 321 வீடுகளுடன் கூடிய இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

Update: 2022-09-14 12:43 GMT

இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே போர் நடைபெற்ற போது அங்கிருந்து தமிழர்கள் வெளியேறி தமிழகத்தில் தஞ்சம் அடைந்தனர். இவர்கள் தமிழகத்தில் பல மாவட்டங்களில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் 7 முகாம்களில் இலங்கை தமிழர்கள் வசிக்கின்றனர்.

இதில் ஒருசில முகாம்களில் மிகவும் சிறிய வீடுகளில் இலங்கை தமிழர்கள் வாழ்கின்றனர். எனவே இலங்கை தமிழர்களுக்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்க அரசு முடிவு செய்தது. இதையடுத்து தோட்டனூத்து, அடியனூத்து, கோபால்பட்டி ஆகிய 3 முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு, தோட்டனூத்தில் மறுவாழ்வு முகாம் அமைக்கப்பட்டது.

முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்

அங்கு ரூ.17 கோடியே 84 லட்சம் செலவில் 321 கான்கிரீட் வீடுகள் கட்டப்பட்டு, நூலகம், அங்கன்வாடி மையம், பூங்கா மற்றும் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன. இதை தொடர்ந்து தோட்டனூத்து இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம் திறப்பு விழா நேற்று காலை 8.45 மணிக்கு நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி திறந்து வைத்தார்.

இதைத்தொடர்ந்து தோட்டனூத்தில் நடந்த நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, சிறுபான்மை மற்றும் அயலக தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் பயனாளிகளிடம் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டின் சாவிகளை வழங்கினர்.

இந்த விழாவில் கலெக்டர் விசாகன், அயலக தமிழர் நலத்துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ், கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் லதா, வேலுச்சாமி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் காந்திராஜன், இ.பெ.செந்தில்குமார், மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, தோட்டனூத்து ஊராட்சி தலைவர் சித்ரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்