மின்சாரம் தாக்கி கட்டிட மேஸ்திரி பலியானார். குடும்பத்திற்கு ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு உறவினர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
கட்டிட மேஸ்திரி
சேலம் கிச்சிப்பாளையம் காந்தி மகான் தெருவை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 27). கட்டிட மேஸ்திரி. நேற்று முன்தினம் அவரது வீட்டின் அருகே நடந்து வந்தபோது தொங்கி கொண்டிருந்த மின்கம்பி அவர் மீது உரசியது. இதில் கண் இமைக்கும் நேரத்தில் அவரது உடலில் மின்சாரம் பாய்ந்தது.
இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கிச்சிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முனியப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தர்ணா போராட்டம்
இந்த நிலையில் இறந்த முனியப்பன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி உதவி மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மேலும் மனைவி வளர்மதி மற்றும் உறவினர்கள் முனியப்பன் உடலை வாங்க மறுத்து நேற்று சேலம் அரசு ஆஸ்பத்திரி முன்பு மறியல் போராட்டம் நடத்த முயன்றனர். இதையடுத்து போலீஸ் உதவி கமிஷனர் வெங்கடேசன் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
பின்னர் அவர்கள் அரசு ஆஸ்பத்திரி நுழைவு வாசல் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். மீண்டும் அவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு முனியப்பன் உடலை அவர்கள் பெற்றுச்சென்றனர். இதனால் அரசு ஆஸ்பத்திரி முன்பு நேற்று சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.