அரசு பஸ்களில் மண்டபம், உச்சிப்புளி பயணிகளை ஏற்ற மறுப்பு?

ராமேசுவரத்தில் இருந்து மதுரைக்கு இயக்கும் அரசு பஸ்களில் மண்டபம், உச்சிப்புளி பயணிகளை ஏற்ற மறுப்பதாக பயணிகள் புகார் தெரிவித்தனர்.

Update: 2023-08-06 18:45 GMT

ராமேசுவரம், 

ராமேசுவரத்தில் இருந்து மதுரைக்கு இயக்கும் அரசு பஸ்களில் மண்டபம், உச்சிப்புளி பயணிகளை ஏற்ற மறுப்பதாக பயணிகள் புகார் தெரிவித்தனர்.

அரசு பஸ்கள்

அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பாம்பன் ரெயில் தூக்குப்பாலத்தில் ஏற்பட்ட அதிர்வு மற்றும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ராமேசுவரம் வரையிலான ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கடந்த 7 மாதத்திற்கு மேலாகவே ராமேசுவரம் ரெயில் போக்குவரத்து முழுமையாக நிறுத்தி வைக்கப்பட்டு மண்டபம் மற்றும் ராமநாதபுரம் வரை மட்டுமே அனைத்து ரெயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் தற்போது ராமேசுவரத்தில் இருந்து இயக்கப்படும் அரசு பஸ்களில் பயணிகளின் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக உள்ளது.

ராமேசுவரத்தில் இருந்து தினமும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்கள் அனைத்தும் தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம், மண்டபம் கேம்ப், உச்சிப்புளி உள்ளிட்ட ஊர்கள் வழியாகவே ராமநாதபுரம் சென்று அங்கிருந்துதான் மற்ற ஊர்களுக்கு செல்லும்.

ஏற்ற மறுப்பு

இந்த நிலையில் ராமேசுவரத்தில் இருந்து மதுரை, கோவை உள்ளிட்ட ஊர்களுக்கு இயக்கப்படும் மதுரை கோட்டத்தின் அரசு பஸ்களில் மண்டபம், உச்சிப்புளி, ராமநாதபுரம் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பயணிகளை ஏற்ற மறுப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட அரசு பஸ்களில் மதுரைக்கு செல்லும் பயணிகளை மட்டுமே ஏற்றி வருவதாகவும், பாம்பன், மண்டபம், உச்சிப்புளி, ராமநாதபுரம் செல்லும் பயணிகளை ஏறக்கூடாது என்று கண்டக்டர்கள், டிரைவர்கள் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், அனைத்து இருக்கைகளிலும் மதுரை பயணிகள் அமர்ந்து இருக்கை நிரம்பிய பிறகே மற்ற ஊர் பயணிகளை ஏற்றுவதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால் இப்பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் நின்று கொண்டே பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக முதியவர்களும், கர்ப்பிணிகளும், நோயாளிகளும் பாதிக்கப்படுகின்றனர்.

பயணிகள் கோரிக்கை

நேற்று விடுமுறை தினம் என்பதால் ராமேசுவரம் கோவிலுக்கு மதுரை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் ராமேசுவரத்திலிருந்து மதுரை புறப்பட்ட அரசு பஸ்களில் கூட்டம் அதிகமாகவே இருந்தது. இதனால் உச்சிப்புளி, மண்டபம், ராமநாதபுரம் செல்லும் பயணிகளை மதுரை கோட்டத்தின் அரசு பஸ்களில் இருந்த டிரைவர், கண்டக்டர் ஏற்ற மறுத்தனராம். அப்போது பயணிகளுக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

எனவே, ராமேசுவரம் வரையிலான ரெயில் போக்குவரத்து தொடங்கும் வரை ராமேசுவரத்தில் இருந்து மதுரை உள்ளிட்ட அனைத்து ஊர்களுக்கும் கூடுதல் பஸ்களை இயக்கவும், அனைத்து அரசு பஸ்களும் முக்கிய பஸ் நிறுத்தங்களில் நின்று செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்