மயங்கி விழுந்த மானை மீட்டு சிகிச்சை
கூடலூரில் சுவரில் மோதி மயங்கி விழுந்த மானை மீட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது
கூடலூர்
கூடலூரை சுற்றி உள்ள வனப்பகுதிகளில் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. சில சமயங்களில் வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து விடுகிறது. கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட மேல் கூடலூர் பகுதியில் அரிய வகை குரைக்கும் மான் வழி தவறி ஊருக்குள் புகுந்தது. அப்பகுதியில் உள்ள வீட்டின் சுவரில் மோதி மயங்கி விழுந்தது. இதை பார்த்த பொதுமக்கள் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து வன ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து குரைக்கும் மானை மீட்டு கூடலூர் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் ரஞ்சித் சிகிச்சை அளித்து வருகிறார். இதில் மானின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. தொடர்ந்து கால்நடை டாக்டர் கண்காணிப்பில் மானுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, மான் குணம் அடைந்த பிறகு வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்கபடும் என்றனர்.