ஊரப்பாக்கத்தில் ரூ.50 கோடி அரசு நிலம் மீட்பு

ஊரப்பாக்கத்தில் ரூ.50 கோடி அரசு நிலங்களை அதிகாரிகள் மீட்டனர்.

Update: 2022-07-17 09:01 GMT

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலையோரம் அரசுக்கு சொந்தமான குளத்தை சிலர் ஆக்கிரமித்து வணிக வளாகங்கள் கட்டி வாடகைக்கு விட்டிருந்தனர். இதனால் ஊரப்பாக்கம் ஏரி நிரம்பி வழியும்போது அடையாறு கால்வாய்க்கு தண்ணீர் செல்ல முடியாமல் ஒவ்வொரு ஆண்டும் ஜி.எஸ்.டி. சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் ஊரப்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வணிக வளாக கட்டிடங்களை இடிக்க செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் உத்தரவிட்டார்.

இதனைதொடர்ந்து நேற்று காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாய் கிருஷ்ணன், வெங்கட்ராகவன், வண்டலூர் தாசில்தார் பாலாஜி ஆகியோர் தலைமையில் வருவாய்த்துறையினர் மற்றும் ஊரக வளர்ச்சி துறையை சேர்ந்த ஊழியர்கள் ராட்சத பொக்லைன் எந்திரத்துடன் பலத்த போலீஸ் பாதுகாப்போடு குளத்தை ஆக்கிரமித்து கட்டியிருந்த வணிக வளாக கட்டிடங்களை இடித்து அகற்றினர். இது குறித்து வருவாய்த்துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில்:-

அரசு ஊரப்பாக்கம் ஊராட்சியில் ஜி.எஸ்.டி. சாலையையொட்டி அரசுக்கு சொந்தமான குளம் 4 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில் குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களை இடித்து மீட்கப்பட்ட 1 ஏக்கர் நிலத்தின் மதிப்பு ரூ.50 கோடி ஆகும்.

இவ்வாறு கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்