திருச்சி: பைக்கில் பட்டாசை கொளுத்தி வீலிங் செய்த இளைஞர்கள் - ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை

தமிழகத்தில் ஆங்காங்கே இளைஞர்கள் பைக் சாகசங்களில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.;

Update:2023-11-14 14:06 IST

திருச்சி,

தீபாவளி பண்டிகையின்போது, இளைஞர் ஒருவர் தன் பைக்கில் பட்டாசை கொளுத்திக்கொண்டு வீலிங் செய்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. டெவில் ரைடர்ஸ் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோ பதிவிடப்பட்டிருந்தது. 

முதலில் இது எங்கு எடுத்தது என்று தெரியாமல் இருந்த நிலையில், போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது வீடியோ பதிவிட்ட இன்ஸ்டாகிராம் பக்கத்தை வைத்து திருச்சியில் எடுக்கப்பட்டது என்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து திருச்சி போலீசார் நடத்திய தொடர் விசாரணையில், பைக் சாகசத்தில் ஈடுபட்டது தஞ்சாவூரை சேர்ந்த மணிகண்டன் என்பதும், இந்த சாகசத்தை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டது திருச்சி வயலூர் ரோடு குமரன் நகர், கல்லாங்காடு பகுதியை சேர்ந்த அஜய்(வயது 24) என்பதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து மாவட்ட எஸ்.பி. வருண்குமார் உத்தரவின் பேரில் பைக் ரைடர்ஸ் மணிகண்டன் அவரது நண்பர் அஜய் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் திருச்சியை சேர்ந்த அஜய் கைது செய்யப்பட்டார். மணிகண்டனை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் திருச்சியில் பல்வேறு பகுதிகளில் பைக்கில் வீலிங் செய்த இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில், திருச்சி மாவட்டத்தில் பைக் வீலிங் செய்து சிக்கிய 13 பேரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வட்டாரப் போக்குவரத்து துறைக்கு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர். மேலும் அச்சுறுத்தும் வகையில், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் பைக் வீலிங் செய்பவர்கள் குறித்து 94874 64651 என்ற எண்ணில் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்