ரேஷன்கடை பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டம்

கூட்டுறவு இணை பதிவாளரை கண்டித்து ரேஷன்கடை பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் கு.பாலசுப்பிரமணியன் அறிவிப்பு

Update: 2023-07-01 17:28 GMT

கடலூர்

தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் கடலூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாகை மாவட்டத்தில் பணிபுரியும் கூட்டுறவு துறை இணை பதிவாளர், பணியாளர் விரோத போக்கை கடைபிடித்து வருகிறார். பதவி உயர்வு அளிப்பதில் பட்டியலின பணியாளர்களின் பதவி உயர்வுகளை திட்டமிட்டு, தொடர்ந்து நிறுத்தி வருகிறார். இதுகுறித்து கேட்ட பணியாளர்களை, நோட்டீசு வழங்கி நிரந்தரமாக பணியில் இருந்து நீக்கி விடுவதாக மிரட்டுகிறார். பெண் பணியாளர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருகிறார். இதுதொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்ததன் அடிப்படையில், விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டியிடம் பணியாளர்கள் நடந்த விவரங்கள் அனைத்தையும் கூறினர். ஆனால் அந்த அறிக்கை மீது, மேல்நடவடிக்கை எடுக்க விடாமல் கூட்டுறவு துறை இணை பதிவாளர் தனக்கு தெரிந்த சிபாரிசுகள் மூலம் தடுத்து நிறுத்தி வருகிறார்.மேலும் அவர், எடை போட்டு ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் வழங்காமல், எடை குறைவாக வழங்கிவிட்டு ஆய்வு என்ற பெயரில் இருப்பு குறைவாக இருக்கிறது என்று கூறி பணியாளர்கள் மீது குற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். அவரை கண்டித்து வருகிற 10-ந் தேதி மாநிலம் முழுவதும் உள்ள ரேஷன் கடை பணியாளர்கள் அனைவரும் வேலைநிறுத்த போராட்டத்தை நடத்த உள்ளனர். எனவே இவ்விஷயத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்