மாடுகள் வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சி
குண்டடம் வாரச்சந்தையில் மாடுகள் வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சி;
குண்டடம்
குண்டடம் வாரச்சந்தையில் தீவன பயிர் பற்றாக்குறையால் மாடுகள் வரத்து அதிகரிப்பால் விலை கடும் வீழ்ச்சியடைந்தது
சனிக்கிழமை தோறும் மதியம் 1 மணிமுதல் மாலை 6 மணி வரை குண்டடம் மாட்டுச்சந்தை கூடுகிறது. இந்த சந்தைக்கு குண்டடம், காங்கயம், தாராபுரம், ஊதியூர், மடத்துக்குளம், பல்லடம், பூளவாடி, குடிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் விற்பனைக்காக மாடுகள், வளர்ப்புக் கன்றுகள், காளைகன்றுகளை கொண்டு வருகின்றனர்.
ஈரோடு, கோவை, திருப்பூர். பொள்ளாச்சி, கேரளா, ஊட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் வந்து மாடுகளை வாங்கிச் செல்கின்றனர்.
வாரம்தோறும் சுமார் 2ஆயிரம் மாடுகள் இங்கு விற்பனைக்கு வருகின்றன. ஆனால் பெருமளவு இறைச்சிக்கு செல்லும் மாடுகள் கேரளா, ஊட்டி போன்ற பகுதிகளுக்கு செல்கிறது. இந்த நிலையில் இப்பகுதியில் மழை பொய்த்து போனதால் கால்நடைகளை வளர்க்க முடியாமல் அதிக அளவில் விற்பனை செய்து வருகின்றனர் இதனால் மாடுகளின் வரத்து அதிகரித்துள்ளதால் இந்தவாரம் விலை கடும் வீழ்ச்சியடைந்தது.
அதே நேரத்தில் வளர்ப்பு மாடுகள் மற்றும் கிடேரிகளை வாங்குவோர் எண்ணிக்கு குறைந்துள்ளது. கடந்த வாரங்களில் ரூ.40ஆயிரம்வரை விலைபோன கறவை மாடுகள் இந்த வாரம் ரூ.30ஆயிரம் வரையே விலைபோனது.
ரூ.20ஆயிரம் வரை விலைபோன வளர்ப்புக் கிடேரிகள் இந்த வாரம் ரூ.15ஆயிரத்துக்கு குறைவாகவே விலை போனது.
இதுபற்றி வியாபாரிகள் தரப்பில் கூறும்போது, வழக்கமாக வறட்சி சீசனில் மாடுகள் விலை குறைவாகத்தான் இருக்கும். பருவமழை தொடங்கினால் விலை கூடும் என்றனர்
---