ராணிப்பேட்டை மாவட்ட வரைவு வாக்குச்சாவடி பட்டியல்

ராணிப்பேட்டை மாவட்ட வரைவு வாக்குச்சாவடி பட்டியலை கலெக்டர் வளர்மதி வெளியிட்டார்.

Update: 2023-08-21 17:47 GMT

வாக்குச்சாவடி பட்டியல்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு 2024-ன் படி வரைவு வாக்குச்சாவடி பட்டியலை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான வளர்மதி வெளியிட்டார்.

அப்போது அவர் பேசியதாவது :-

மறு சீரமைப்பு பணி

இந்திய தேர்தல் ஆணையம் மூலம் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் 2024-க்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மேற்படி, சிறப்பு சுருக்க திருத்தப்பணி மேற்கொள்வதற்கு முன்பாக வாக்குச்சாவடி மறுசீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட வேண்டும். இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வழிமுறைகளை அளித்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி வாக்குச்சாவடி மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளும் பொருட்டு, ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளில் மொத்தமுள்ள 1,122 வாக்குச் சாவடிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆட்சேபனை

இந்த வரைவு வாக்குச்சாவடி பட்டியல், அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்கள் அலுவலகமான ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் வருவாய் கோட்ட அலுவலகங்கள் மற்றும் அனைத்து உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், நகராட்சி ஆணையாளர் அலுவலகம், தாலுகா அலுவலகங்களிலும் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கூட்டம் நடத்தி அவர்களின் ஆலோசனைகளும் கோரப்பட்டுள்ளது. எனவே அரசியல் கட்சிகள், பொதுமக்கள், தன்னார்வலர்கள், குடியிருப்போர் நல சங்க உறுப்பினர்கள் எவருக்கேனும் இந்த வாக்குச்சாவடி பட்டியலில் ஆட்சேபனை அல்லது திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனில் தங்களது எழுத்துப் பூர்வமான கடிதங்களை அந்தந்த வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அல்லது மாவட்ட தேர்தல் அலுவலருக்கு வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்ட 7 நாட்களுக்குள் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முரளி, வருவாய் கோட்டாட்சியர்கள் பாத்திமா, சத்தியபிரசாத், தேர்தல் தாசில்தார் ஜெய்குமார் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்