ராமேசுவரம் கோவிலில் இன்று நடை அடைப்பு

மாசி சிவராத்திரி திருவிழாவின் 3-வது நாளான இன்று ராமேசுவரம் கோவிலில் சுவாமி, அம்பாள் பர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளுவதை முன்னிட்டு கோவில் நடை அடைக்கப்படுகிறது.

Update: 2023-02-12 18:45 GMT

ராமேசுவரம், 

மாசி சிவராத்திரி திருவிழாவின் 3-வது நாளான இன்று ராமேசுவரம் கோவிலில் சுவாமி, அம்பாள் பர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளுவதை முன்னிட்டு கோவில் நடை அடைக்கப்படுகிறது.

மகா சிவராத்திரி விழா

ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் இந்த ஆண்டின் மாசி மகா சிவராத்திரி திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவானது வருகின்ற 22-ந் தேதி வரையிலும் நடைபெறுகின்றது. திருவிழாவில் 2-வது நாளான நேற்று காலை சுவாமி அம்பாள் தங்க கேடயத்தில் பஞ்சமூர்த்திகளுடன் கோவிலிலிருந்து எழுந்தருளி ரதவீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். தொடர்ந்து நேற்று இரவு 7 மணிக்கு மேல் சுவாமி வெள்ளி கற்பக விருட்ச வாகனத்திலும், அம்பாள் தங்க காமதேனு வாகனத்திலும் எழுந்தருளி பஞ்சமூர்த்திகளுடன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

இதனிடையே மாசி சிவராத்திரி திருவிழாவின் 3-வது நாளான இன்று கோவிலின் நடையானது அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு தொடர்ந்து ஸ்படிகலிங்க தரிசன பூஜை நடைபெற்று கால பூஜை நடைபெற்று 4 மணிக்கு சுவாமி அம்பாள் தங்க கேடயத்தில் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது.

நடை அடைப்பு

தொடர்ந்து காலை 6 மணிக்கு சுவாமி வெள்ளி பூத வாகனத்திலும், அம்பாள் வெள்ளி கிளி வாகனத்திலும் பஞ்ச மூர்த்திகளுடன் கோவிலில் இருந்து எழுந்தருளி நகரின் முக்கிய சாலைகள் வழியாக கெந்தமாதனபர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருள்கின்றனர்.

பின்னர் மாலை 5.30 மணிக்கு பர்வதம் மண்டகப்படியில் வைத்து சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று அங்கிருந்து புறப்பாடாகி இரவு 10 மணிக்கு மேல் கோவிலுக்கு வந்தடைந்த பின்னர் அர்த்தசாம பூஜை மற்றும் பள்ளியறை பூஜை நடைபெற்று கோவில் நடை சாத்தப்படுகின்றது.

மூன்றாம் திருநாளான இன்று சுவாமி அம்பாள் கெந்தமாதனபர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளுவதை முன்னிட்டு இன்று காலை 6 மணியிலிருந்து கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளில் புனித நீராடவும், சாமி தரிசனம் செய்யவும் இன்று முழுவதும் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கோவில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்