புதர் மண்டி கிடக்கும் ராமநாதன்கோவில் வடிகால் வாய்க்கால்
கூத்தாநல்லூர் அருகே புதர் மண்டி கிடக்கும் ராமநாதன்கோவில் வடிகால் வாய்க்கால் தூர்வாரப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
கூத்தாநல்லூர்:
கூத்தாநல்லூர் அருகே புதர் மண்டி கிடக்கும் ராமநாதன்கோவில் வடிகால் வாய்க்கால் தூர்வாரப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
வடிகால் வாய்க்கால்
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள லெட்சுமாங்குடி மரக்கடையில், அப்பகுதி விவசாயிகளின் பயன்பாட்டிற்காக, ராமநாதன்கோவில் வடிகால் வாய்க்கால் ஏற்படுத்தப்பட்டது. ஆற்றிலிருந்து அதிகமாக தண்ணீர் வரும் போதும், மழை காலங்களில் மழைநீர் அதிகளவில் வயல்களில் தேங்கி நிற்கும் போதும் இந்த வாய்க்காலில் வெளியேற்றுவது வழக்கம்.
புதர் மண்டி கிடக்கிறது
ராமநாதன்கோவில், சித்தாத்தங்கரை, தோட்டச்சேரி, மரக்கடை, சர்க்க கரை, விப்பையனூர், தென்கோவனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், தங்களது வயல்களில் தேங்கி நிற்கும் தண்ணீரை இந்த வடிகால் வாய்க்கால் மூலம் வெளியேற்றி வருகின்றனர். இந்த வாய்க்கால் மூலம் சுமார் 1,500 ஏக்கரில் சாகுபடி செய்யப்படும் நெல், உளுந்து, பயறு, பருத்தி பயிர்கள் பாதுகாக்கப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக இந்த வடிகால் வாய்க்காலில் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. இதனால் வயல்களில் தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்ற முடியாமல் விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.
தூர்வார வேண்டும்
இதன் காரணமாக வயல்களில் தெளிக்கப்பட்ட விதை நெல்கள் மற்றும் நெற்பயிர்கள், உளுந்து பயறு பருத்தி உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ராமநாதன்கோவில் வடிகால் வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.