ராமஜெயம் கொலை வழக்கு: திருச்சியில் இன்று 2-வது நாளாக 5 பேருக்கு மருத்துவ பரிசோதனை

நேற்றைய தினம் கடலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் என்பவருக்கு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

Update: 2022-11-19 07:52 GMT

திருச்சி,

தி.மு.க. முதன்மை செயலாளரும், நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி கே.என்.ராமஜெயம் கொலை வழக்கை தற்போது சிறப்பு புலனாய்வு குழுவினர் கடந்த 6 மாதமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் சந்தேக நபர்களான 13 பேரிடம் உண்மை கண்டறியும் பரிசோதனை நடத்த அந்த குழு முடிவு செய்தது.

இதற்காக அந்த 13 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது சாமி ரவி, திலீப் என்கிற லட்சுமி நாராயணன், சிவா, ராஜ்குமார், சத்யராஜ், சுரேந்தர், நரைமுடி கணேசன், மோகன்ராம், கலைவாணன், தினேஷ், மாரிமுத்து, செந்தில் ஆகிய 12 பேர் உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் தெரிவித்தனர்.

அவர்களுக்கு முழு உடல் தகுதி மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு அந்த அறிக்கையுடன் வருகிற 21-ந்தேதி நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி நேற்றைய தினம் 6 பேருக்கு இதய நோய் நிபுணர், அறுவை சிகிச்சை நிபுணர், மனநல மருத்துவர், பொது மருத்துவர் உட்பட 5 டாக்டர்கள் பரிசோதனை மேற்கொண்டனர்.

மேலும் நேற்றைய தினம் கடலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் என்பவருக்கு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. மீதம் இருந்த நரைமுடி கணேசன், மோகன்ராம், கலைவாணன், தினேஷ், மாரிமுத்து ஆகிய 5 பேருக்கும் திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை இன்று காலை தொடங்கியது. இந்த பரிசோதனை அறிக்கை உடனடியாக வழங்கப்பட உள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் வருகிற 21-ந்தேதி நீதிபதி உண்மை கண்டறியும் சோதனை தொடர்பான முடிவினை அறிவிப்பார் என சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்