பள்ளிவாசல்களில் ரம்ஜான் சிறப்பு தொழுகை
மாவட்டம் முழுவதும் ரம்ஜானை முன்னிட்டு பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது.
காரியாபட்டி,
மாவட்டம் முழுவதும் ரம்ஜானை முன்னிட்டு பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது.
காரியாபட்டி
காரியாபட்டி பெரிய பள்ளிவாசலில் ரம்ஜானை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது. பின்னர் முஸ்லிம் பெருமக்கள் மற்றும் குழந்தைகள் கையில் கொடியுடன் காரியாபட்டி பெரிய பள்ளிவாசலில் இருந்து பஜார் வழியாக பஸ் நிலையம் மற்றும் பல்வேறு பகுதிகளில் ஊர்வலமாக சென்று மந்திரி ஓடை அருகே உள்ள திடலை சென்று அடைந்தனர். காரியாபட்டியில் உள்ள பல்வேறு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
சாத்தூர்
சாத்தூர் நகர் பகுதியில் இருந்து முஸ்லிம்கள் ஜூம்மா பள்ளிவாசலில் தொழுகையை முடித்த பின்னர் ஊர்வலமாக காட்டு பள்ளிவாசலுக்கு நடந்து சென்று சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இதில் சாத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டமுஸ்லிம்கள் கலந்துகொண்டனர். சிறப்பு தொழுகைக்கு ஜும்மா பள்ளிவாசல் தலைமை ஹஜ்ரத் முகமது சர்புதீன் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். தொழுகை முடிந்த பின்னர் முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
விருதுநகர்
விருதுநகரில் ரம்ஜானை முன்னிட்டு முஸ்லிம் பெருமக்கள் சிறப்பு தொழுகை மேற்கொண்டனர். இந்நகர் பெரிய பள்ளிவாசல் ஜமாத் சார்பில் பெரிய பள்ளிவாசல் திடலில் ஜமாத் தலைவர் அய்யூப் தலைமையில் உலமாக்கள் இஸ்மாயில் பைஜி மற்றும் உமர் பாரூக் சிறப்பு தொழுகையை நடத்தினர். இதில் திரளான முஸ்லிம் பெருமக்கள் கலந்து கொண்டனர்.
மேலும் சின்ன பள்ளிவாசலில் ஜமாத் தலைவர் நூருல்அமீன் தலைமையிலும் கல்பள்ளிவாசலில் தலைவர் அபுபக்கர் தலைமையிலும், கலெக்டர் அலுவலக பள்ளிவாசலில் தலைவர் ஹபிப் முகமது தலைமையிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது. தவ்ஹீத் ஜமாத் சார்பில் நகராட்சி முஸ்லிம் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அனைத்து சமுதாயத்தினரும் முஸ்லிம் பெருமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
அதேபோல சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, திருச்சுழி, ஆலங்குளம், தாயில்பட்டி உள்பட மாவட்டம் முழுவதும் சிறப்பு தொழுகை நடந்தது.