ராஜராஜ சோழன் சதய விழா பந்தக்கால் நடும் நிகழ்ச்சி

தஞ்சை பெரிய கோவிலில் ராஜராஜசோழன் சதய விழாவையொட்டி பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

Update: 2022-10-25 20:26 GMT

தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

தஞ்சை பெரிய கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது. பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்த ஐப்பசி சதய நட்சத்திரம் வருகிற 3-ந் தேதி வருவதால் அவரது 1037-வது ஆண்டு சதய விழா அன்றைய தினம் நடைபெறவுள்ளது.

சதய விழா

ராஜராஜசோழனின் சதய விழாவை முன்னிட்டு வருகிற 2-ந்தேதி (புதன்கிழமை) பெரிய கோவில் வளாகத்தில் கவியரங்கம், கருத்தரங்கம், ஆன்மிக சொற்பொழிவு, பரிசளிப்பு விழாவும், 3-ந் தேதி காலை தேவார நூலுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி, ஓதுவார்களின் வீதியுலாவும் நடக்கிறது.

பின்னர் பெரிய கோவிலுக்கு அருகே உள்ள மாமன்னன் ராஜராஜ சோழனின் சிலைக்கு கோவில் நிர்வாகம், மாவட்டம் நிர்வாகம் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர். தொடர்ந்து பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு பேரபிஷேகமும் நடைபெறுகிறது.

பந்தக்கால் முகூர்த்தம்

இந்த விழாவையொட்டி தஞ்சை பெரிய கோவிலில் நேற்று காலை பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது. கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக ஒருநாள் மட்டும் விழா நடைபெற்றது. தற்போது 2 நாட்கள் நடைபெறுவதையொட்டி நேற்று காலை பந்தக்காலுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அதன் பின்னர் தீபாராதனை காட்டப்பட்டு பெரியகோவில் வளாகத்தில் பெருவுடையார் சன்னதிக்கு இடதுபுறத்தில் பந்தக்கால் நடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சதய விழாக்குழு தலைவர் செல்வம், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜாபோன்ஸ்லே, கோவில் உதவி ஆணையர் கவிதா, செயல் அலுவலர் அரவிந்தன் மற்றும் கோவில் பணியாளர்கள், சதய விழாக்குழுவினர், பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்