விருத்தாசலம் ராஜகோபாலசாமி கோவில் தேரோட்டம்
விருத்தாசலம் ராஜகோபாலசாமி கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் தெற்கு பெரியார் நகரில் ருக்மணி, சத்யபாமா சமேத ராஜகோபாலசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா கடந்த 13-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து சாமிக்கு தினசரி சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சாமி வீதிஉலாவும் நடைபெற்று வந்தது. மேலும் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி, திரு பல்லக்கில் ஆண்டாள் திருக்கோலம், புஷ்ப பல்லக்கில் சாமி வீதி உலா வேடுபறி உற்சவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது.
தேரோட்டம்
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலையில் ராஜகோபாலசாமிக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேரில் சிறப்பு அலங்காரத்தில் ருக்மணி, சத்யபாமா சமேத ராஜகோபாலசாமி எழுந்தருளினார். இதையடுத்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இந்த தேரானது முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது. அதை தொடர்ந்து மாலை ஆயியார் மடத்தெரு வழியாக மணிமுக்தாறு நதிக்கரையில் தீர்த்தவாரி சந்நிதி சேர்ந்து துவஜ அவரோகணம் நிகழ்ச்சி நடந்தது. இன்று(ஞாயிற்றுக்கிழமை) திருமஞ்சனம் துவாதச ஆராதனம் புஷ்பயாகம் நிகழ்ச்சிகளும், பல்லக்கில் சாமி புறப்பாடும், நாளை (திங்கட்கிழமை) விடையாற்றி உற்சவம், திருமஞ்சனம் மற்றும் சாத்துமுறை நிகழ்ச்சிகளுடன் நிகழ்ச்சி நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.