மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

மயிலாடுதுறையில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் மகாபாரதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.;

Update:2023-10-19 00:15 IST

மழைநீர் சேகரிப்பு

மயிலாடுதுறையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரசார காணொலி வாகனம் மற்றும் மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொடங்கிய ஊர்வலத்தை கலெக்டர் மகாபாரதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது கலெக்டர் பேசியதாவது:- தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பின் அவசியம் பற்றி பொதுமக்களிடம் நேரடியாக சென்று சேர்வதற்கான விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் பிரசார வாகனம் தொடங்கப்பட்டது.

இந்த வாகனமானது ஒவ்வொரு கிராமங்களுக்கும் நேரடியாக சென்று வடகிழக்கு பருவமழை, கோடை காலங்களில் பெய்யும் மழைநீரை சேகரிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும். அதுமட்டுமில்லாமல், மழைநீரை நேரடியாகவோ, நிலத்தடியிலோ செலுத்தி எப்படி சேமிப்பது என்பது குறித்தும் பொதுமக்களிடையே இந்நிகழ்ச்சியின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம்

தமிழக அரசு மழைநீர் சேகரிப்பை ஒரு மக்கள் இயக்கமாக உணர்த்தி தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்தி வருகிறது. வீடுகள் மற்றும் கட்டிடங்கள் மூலம் பெறப்படும் மழைநீர் வீதிகளில் வழிந்தோடி வீணாக கடலில் கலந்திடா வண்ணம் காத்திட ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை சீர்படுத்தி செம்மையாக செய்திட வேண்டும் என்றார்.

மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலமானது மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொடங்கி மயிலாடுதுறை நகரப் பூங்காவில் முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் நிர்வாக பொறியாளர் ரவிச்சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்