வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது; பொதுமக்கள் அவதி

வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது; பொதுமக்கள் அவதி

Update: 2022-08-28 16:06 GMT

பல்லடம்

பல்லடம் பகுதியில் பெய்த கனமழையால் மழை நீருடன் கழிவு நீர் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

கனமழை

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மழையில் பெய்த மழையால் அமராவதி அணை நிரம்பியது. திருமூர்த்தி அணைக்கும் பி.ஏ.பி. தொகுப்பு அணைகளில் இருந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நொய்யல் ஆற்றிலும் தண்ணீர் வந்தது. அதே போல் உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், மூலனூர், காங்கயம், வெள்ளகோவில் பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது. பல்லடம் பகுதியிலும் 3 நாட்களாக அவ்வப்போது மழை பெய்தது.

இந்த நிலையில் நேற்று காலை முதல் திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 3 மணி அளவில் இருந்து கருமேகங்கள் சூழ்ந்து பலத்த மழை பெய்தது. இதில் நொச்சி பாளையம் பிரிவு, மூலக்கடை பகுதியில் போதிய சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால் மழை நீர் மற்றும் சாக்கடை கழிவுகள் அனைத்தும் சாலையின் நடுவே தேக்கம் அடைந்தது. இதனால் அவ்வழியாக செல்லக்கூடிய வாகனங்கள் ஊர்ந்து சென்றதோடு, வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மிகவும் அவதிப்பட்டனர். மேலும் அப்பகுதியில் உள்ள வீடுகளிலும் மழை நீர் சூழ்ந்தது.

பல்லடம்

பல்லடம் பகுதியில் தொடர்ந்து ஒரு மணிநேரம் மழை பெய்ததால் பல்லடம் பகுதியில் உள்ள அண்ணா நகர், மகாலட்சுமி புரம் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது.

மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். மங்கலம் ரோடு மகாலட்சுமிபுரம் பகுதியில் குடியிருப்பு பகுதிகளில் மழை நீருடன், கழிவு நீரும் சேர்ந்து வந்ததால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது "மழைநீர் செல்வதற்கு சரியான வடிகால் வசதி இல்லாததால் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. மழை நீருடன், கழிவு நீரும் சேர்ந்து குடியிருப்பில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து விட்டது. இதனால் நோய் ஏற்படும் அபாயம் உள்ளது எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து, மழைநீர் குடியிருப்பு பகுதியில் தேங்காவண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்