ரூட்டை மாற்றிய மழை...! ஊட்டி போல் குளிறும் சென்னை...! வெதர்மேன் அப்டேட்

சென்னையா? இல்லை ஊட்டியா? என கேட்கும் அளவிற்கு குளிர் வாட்டி வதைக்கிறது. சென்னை மக்கள் எல்லோரும் தற்போது போர்வைக்குள் நடுங்கிக்கொண்டு இருக்கிறார்கள்.

Update: 2022-11-22 07:42 GMT

சென்னை

தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வடகிழக்கு பருவமழை தொடங்கியது. பருவமழை தொடங்கிய சில நாட்களில் சென்னையில் கனமழை வெளுத்து வாங்கியது. அப்போது சென்னையில் தொடர்ச்சியாக சில நாட்கள் கனமழை வெளுத்து வாங்கியது. அதேபோல சீர்காழி உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை காரணமாகப் பாதிப்புகள் சற்று மோசமாகவே ஏற்பட்டு இருந்தது.

இந்த நிலையில் தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது மேற்கு - வடமேற்கு திசையில் தெற்கு ஆந்திரா, தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரை நோக்கி நகர்ந்து இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் சென்னையை ஒட்டிய வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை சில பகுதிகளில் கனமழை பெய்யலாம். தரைக்காற்று 30 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.

சென்னையா? இல்லை ஊட்டியா? என கேட்கும் அளவிற்கு  குளிர் வாட்டி வதைக்கிறது. சென்னை மக்கள் எல்லோரும் தற்போது போர்வைக்குள் நடுங்கிக்கொண்டு இருக்கிறார்கள்.

குளிரான வானிலை நிலவுவதை அடுத்து பலரும் இதை வைத்து மீம்ஸ் போட்டு வருகின்றன. இணையம் முழுக்க இதுதான் தற்போது டிரெண்டாகி உள்ளது. இதனால் ட்விட்டரில் தற்போது #ChennaiSnow என்ற டேக் டிரெண்டாகி வருகிறது. நெட்டிசன்கள் பலர் சென்னை ஊட்டி போல இருக்கிறது. ஊட்டி என்ன விலைன்னு கேளு.. சுவிட்சர்லாந்து என்ன விலைன்னு கேளு என்று சொல்லும் அளவிற்கு வரிசையாக மீம்ஸ்களை போட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது பேஸ்புக் பக்கத்தில் போட்டுள்ள பதிவு முக்கியத்துவம் பெற்றுள்ளது. நேற்று மாலை நிலவரப்படி, காற்றழுத்த தாழ்வு மண்டலம் நன்றாக இருந்தது.

இதை வைத்து பார்க்கும் போது சென்னை மாநகருக்கு குறைந்தது 100 மில்லிமீட்டர் அளவிற்கு மழை பெய்ய வேண்டும். இதனை இன்று காலை நிலவரத்தை பொறுத்தே தெரிந்து கொள்ளலாம். அதேசமயம் சென்னைக்கு பெருமழையை எதிர்பார்த்து ஏமாற்றம் அடைவது நமக்கென்ன புதியதா? கடந்த 15 ஆண்டுகளில் பலமுறை ஏமாற்றம் அடைந்திருக்கிறோம். அதில் சிலவற்றை இங்கே காணலாம்.

2018ல் பெய்ட்டி புயல் ஏற்பட்ட போது சென்னையில் பெரிய அளவில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கிடைத்ததோ 0 மில்லிமீட்டர் மழை. இதையடுத்து 2010ல் ஜல் புயலின் போது மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும். இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மகாபலிபுரம் (220 மி.மீ), கல்பாக்கத்தில் (110 மி.மீ) மழை பெய்தது. அப்போது சென்னையில் 50 மி.மீ மழை மட்டுமே பெய்தது.

பின்னர் 2018 கஜா புயலின் போது சென்னைக்கு பலத்த மழை பெய்யும் என்று ஒருகட்டத்தில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் செங்கல்பட்டில் (110 மி.மீ), திருப்போரில் (85 மி.மீ) மழை பெய்தது. சென்னைக்கு 5 - 10 மி.மீ மட்டுமே மழை பெய்தது. 2013ல் மேடி புயலின் போது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் செய்யூரில் (105 மி.மீ) பெய்து ஏமாற்றம் அளித்தது. அப்போது சென்னைக்கு 10 முதல் 15 மி.மீ மட்டுமே மழை பெய்தது.

2012 நவம்பரில் வரலாறு காணாத மோசமான மழைக்காலமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டது. ஆனால் செங்கல்பட்டு (140 மி.மீ), திருப்பதிக்கு வடக்கே (140 மி.மீ) மழை பெய்தது. சென்னைக்கு 1 முதல் 5 மி.மீ மட்டுமே மழை பெய்தது. 2008 நவம்பரில் நல்ல மழை எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சென்னையில் 15 முதல் 20 மி.மீ மட்டுமே மழை பெய்தது எனக் குறிப்பிட்டுள்ளார்.

Full View
Tags:    

மேலும் செய்திகள்