கவுந்தப்பாடி பகுதியில் பலத்த மழை; ஏரி உடைந்து தரைப்பாலத்தை வெள்ளம் அடித்து சென்றது- 60 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

கவுந்தப்பாடி பகுதியில் பலத்த மழை பெய்ததால் ஏரி உடைந்து தரைப்பாலத்தை வெள்ளம் அடித்து சென்றது. 60 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

Update: 2023-05-02 22:07 GMT

கவுந்தப்பாடி

கவுந்தப்பாடி பகுதியில் பலத்த மழை பெய்ததால் ஏரி உடைந்து தரைப்பாலத்தை வெள்ளம் அடித்து சென்றது. 60 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

ஏாி உடைந்தது

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பல இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்கிறது. இந்தநிலையில் கவுந்தப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. இரவு 8 மணி வரை நிற்காமல் கனமழை கொட்டித்தீர்த்தது.

அப்போது கவுந்தப்பாடி அருகே உள்ள ராமாகவுண்டன்வலசு ஏரி கரை திடீரென உடைந்தது. ஏரியில் இருந்து வெளியேறிய வெள்ளம் பூலப்பாளையத்தில் இருந்து அய்யம்பாளையம் செல்லும் ரோட்டில் இருந்த தரைமட்ட பாலத்தை அடித்து சென்றது. இதனால் பூலப்பாளையத்தில் இருந்து அய்யம்பாளையத்துக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாற்றுப்பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டன.

60 வீடுகளுக்குள் தண்ணீர்

தொடர்ந்து எல்லப்பாளையத்தில் உள்ள சுமார் 60 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. வீடுகளில் இருந்த மக்கள் அவசர அவசரமாக வெளியேறி அங்குள்ள மாகாளியம்மன் கோவிலில் தங்கினார்கள்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பவானி தீயணைப்பு துறையினர், போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் எல்லப்பாளையத்துக்கு சென்றார்கள். வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் யாராவது தவிக்கிறார்களா? என்று தேடினார்கள். மேலும் ஏரியில் உடைப்பு ஏற்பட்ட பகுதியை சீரமைக்கும் பணியில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

பவானி

பவானி மற்றும் சுற்று வட்டார பகுதிகளான குருப்பநாய்க்கன்பாளையம், ஊராட்சிக்கோட்டை, காடையம்பட்டி, தொட்டிபாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் மாலை கனமழை கொட்டித்தீர்த்தது.

சாலையில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி நின்றதால் வாகனங்கள் செல்ல முடியாமல் சிரமம் ஏற்பட்டது. பூலப்பாளையம் சாலையோரம் உள்ள ஏரி நிறைந்து அந்த பகுதியில் இருக்கும் சுமார் 20 ஏக்கர் விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்தது.

மேலும் அருகே இருந்த 20-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. தண்ணீர் சூழ்ந்த வீடுகளில் வசித்த மக்கள் அருகே உள்ள பள்ளிக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்