நாமக்கல் மாவட்டத்தில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு ஆராய்ச்சி நிலையம் தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கனமழைக்கு வாய்ப்பு
நாமக்கல் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் 4 நாட்கள் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அடுத்த 4 நாட்கள் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று 35 மி.மீட்டரும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) 40 மி.மீட்டரும், நாளை மறுநாள் (திங்கட்கிழமை) 4 மி.மீட்டரும், 13-ந் தேதி 8 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 82.4 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 68 டிகிரியாகவும் இருக்கும்.
காற்று மணிக்கு முறையே 30 கி.மீட்டர், 20 கி.மீட்டர், 10 கி.மீட்டர், 6 கி.மீட்டர் வேகத்தில் வடமேற்கு, மேற்கு, தென்கிழக்கு திசைகளில் வீசும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 90 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 50 சதவீதமாகவும் இருக்கும்.
இறக்கை அழுகல் நோய்
சிறப்பு வானிலையை பொறுத்தவரையில் வடகிழக்கு பருவமழை காலங்களில் இடி மற்றும் மின்னல் வர அதிகம் வாய்ப்புள்ளது. இடி தாக்குதலில் இருந்து கால்நடைகளை காக்க கால்நடைகளை மழை கருக்கல் வரும் நேரங்களில் மேய்ச்சலுக்கு அனுப்பக்கூடாது. மேலும் மந்தையாக மேயும் வெள்ளாடு மற்றும் செம்மறியாடுகளை மின்னல் தாக்கும் வாய்ப்புள்ளது. இதேபோல் கால்நடைகளை முள்கம்பி வேலி, மின்சார கம்பம் மற்றும் மரங்களின் அருகில் கட்டுவதை தவிர்க்க வேண்டும்.
மழைக்காலத்தில் குளிர்ந்த காற்று வீசுவதால் புதிதாக பொறிக்கப்பட்ட கோழிகுஞ்சுகளை பாதுகாக்கப்பட்ட கொட்டகைகளில் அடைக்க வேண்டும். கடந்த வாரம் கோழியின நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் ஆய்வு செய்யப்பட்ட இறந்த கோழிகள் பெரும்பாலும் இறக்கை அழுகல் நோயின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு இறந்து உள்ளது.
தீவன மேலாண்மை
எனவே பண்ணையாளர்கள் கோழிக்கு அளிக்கப்படும் தீவனத்தில் நுண்ணுயிர் கிருமிகளான கிளாஸ்டிரியம், ஸ்டேப்லோகாக்கஸ் மற்றும் ஈகோலை ஆகியவற்றின் தாக்கம் உள்ளதா என பரிசோதனை செய்து, அதற்கு தகுந்தாற்போல் தீவன மேலாண்மை முறைகளை கையாள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது