பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: பவானி ஆற்றில் உபரிநீர் கூடுதலாக திறப்பு
பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் அணையில் இருந்து பவானி ஆற்றில் திறக்கப்படும் உபரி நீரின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பவானிசாகர்
பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் அணையில் இருந்து பவானி ஆற்றில் திறக்கப்படும் உபரி நீரின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பவானிசாகர் அணை
பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்ததின் காரணமாக அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் இந்த ஆண்டில் 2-வது முறையாக நேற்று முன்தினம் அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியது. இந்த மாத இறுதிவரை அணையின் பாதுகாப்பை கருதி 102 அடிக்கு மேல் தண்ணீர் நிறுத்த முடியாத காரணத்தால் பவானி ஆற்றின் வழியாக உபரி நீர் திறக்கப்பட்டது. இதனால் பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு பொதுப்பணித்துறை சார்பாக வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. இந்த நிலையில் பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் பவானி ஆற்றில் திறக்கப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
உபரிநீர் திறப்பு அதிகரிப்பு
நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு அனைத்து வினாடிக்கு 3 ஆயிரத்து 300 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் உபரி நீராக வினாடிக்கு ஆயிரத்து 700 கன அடி திறக்கப்பட்டது. நேற்று மாலை 6 மணிக்கு அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 5 ஆயிரத்து 400 கன அடியாக அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் 102 அடியாக இருந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் உபரி நீராக வினாடிக்கு 3 ஆயிரத்து 900 கன அடி திறக்கப்பட்டது. கீழ் பவானி வாய்க்காலில் வினாடிக்கு 1,300 கன அடி திறக்கப்பட்டது.