நாமக்கல்லில் பலத்த மழை; மரம் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு

நாமக்கல்லில் நேற்று மாலை பெய்த பலத்த மழையின் காரணமாக மரம் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2022-08-23 18:17 GMT

நாமக்கல்:

மரம் சாய்ந்தது

நாமக்கல் நகரில் நேற்று காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. மாலை 6 மணி அளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை 1 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இதனால் சாலையோரங்களிலும், பள்ளமான பகுதிகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதை பார்க்க முடிந்தது.

இந்த மழைக்கு நாமக்கல்லில் பரமத்தி சாலை இ.பி.காலனி பகுதியில் இருந்த மரம் ஒன்று வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது. சாலையின் பாதி அளவுக்கு மரம் விழுந்து கிடந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் மின் கம்பி மீதும் விழுந்ததால் மின்வினியோகம் தடைபட்டது.

2 மணி நேரம் மழை

தகவல் அறிந்ததும் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். சாலை விரிவாக்க பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டு இருப்பதால், பிடிமானம் இல்லாமல் மரம் சாய்ந்து விழுந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

திருச்செங்கோடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் நேற்று மாலை சுமார் 2 மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல் நாமகிரிப்பேட்டை, பில்லாநல்லூர், அத்தனூர், சீராப்பள்ளி, ஆர்.புதுப்பட்டி பேரூராட்சிகளிலும் கனமழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சீதோசண நிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மழை அளவு

இதேபோல் நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பல்வேறு இடங்களில் திடீரென பரவலாக மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக ராசிபுரத்தில் 29 மி.மீட்டர் மழை பதிவானது. நேற்று காலை 7 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

சேந்தமங்கலம்-22, கொல்லிமலை-22, கலெக்டர் அலுவலகம்-13, குமாரபாளையம்-11, திருச்செங்கோடு-6, மங்களபுரம்-5, நாமக்கல்-1.

மேலும் செய்திகள்