கார் மீது லாரி மோதி இரும்பாலை ஊழியர் பலி

புதுச்சத்திரம் அருகே காா் மீது லாரி மோதி இரும்பாலை ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-06-22 18:45 GMT

கார் மீது லாரி மோதல்

சேலத்தில் இருந்து நாமக்கல்லுக்கு லாரி ஒன்று சென்றது. சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் புதுச்சத்திரம் அருகே தாத்தையங்கார்பட்டி என்ற இடத்தில் சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் சென்றதோடு, நாமக்கல்லில் இருந்து சேலம் நோக்கி சென்ற கார் மீது மோதியது. மேலும் சிறிது தூரம் தரதரவென காரை இழுத்துச் சென்று சாலையோர பள்ளத்தில் இறங்கியது.

இதில் காரை ஓட்டி வந்த சேலம் கே.ஆர்.தோப்பூர் பகுதியை சேர்ந்த லோகநாதன் (வயது 53) சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். மேலும் கார் அப்பளம் போல் நொறுங்கியதால், லோகநாதனின் உடல் காருக்குள் சிக்கிக் கொண்டது. தகவல் அறிந்த புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு பொதுமக்கள் மற்றும் பொக்லைன் எந்திர உதவியுடன் லோகநாதனின் உடல் காரில் இருந்து மீட்கப்பட்டது.

விசாரணை

இதனிடையே இந்த விபத்தில் 2 சக்கர வாகனம் ஒன்றும் சிக்கியதாகவும், அதில் 2 பேர் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் விபத்தில் இறந்த லோகநாதன் சேலம் இரும்பாலையில் ஊழியராக இருந்தது தெரியவந்து உள்ளது. இந்த விபத்து குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்