ரெயில்வே பாதுகாப்பு படையினர் விழிப்புணர்வு ஊர்வலம்
ரெயில்வே பாதுகாப்பு படை சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சுதந்திரத்தை பேணுவோம் நாட்டை காப்போம் என்ற தலைப்பில் ரெயில்வே பாதுகாப்பு படை சார்பில் இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்றது. ஊர்வலத்தை திருச்சி ஜங்ஷன் ரெயில்நிலையம் அருகே கோட்ட மேலாளர் மனீஷ்அகர்வால் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ரெயில்வே பாதுகாப்புபடை முதுநிலை கோட்ட பாதுகாப்பு ஆணையர் ராமகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலமானது ஜங்ஷனில் இருந்து புறப்பட்டு கோர்ட்டு, அரசு மருத்துவமனை சாலை, தில்லைநகர், கே.டி.ஜங்ஷன், மெயின்கார்டுகேட், காந்திமார்க்கெட், பாலக்கரை வழியாக மீண்டும் திருச்சி ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. இதனை தொடர்ந்து சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்ட தியாகிகளின் வீடுகளுக்கு சென்று அவர்களை கவுரவிக்கவும், திருச்சி ரெயில்வே கோட்டத்தில் பல்வேறு இடங்களில் சுமார் 10 ஆயிரம் மரக்கன்றுகளை நடுவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல் காஜாமலையில் உள்ள ெரயில்வே சிறப்பு காவல் படை மைதானத்தில் தொடங்கிய ஊர்வலத்தை இந்திய தேசிய படையின் முன்னாள் வீரர் வெள்ளைச்சாமி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். ெரயில்வே சிறப்பு காவல் படை கமாண்டன்ட் அஜய் ஜோதி ஷர்மா தலைமை தாங்கினார். இந்த ஊர்வலம் மன்னார்புரம், ெரயில்வே ஜங்ஷன் தலைமை தபால் நிலையம், டி.வி.எஸ். டோல்கேட் வழியாக மீண்டும் காஜாமலை மைதானத்தை வந்து முடிவடைந்தது.