ரெயில்வே மேம்பால பணி ஆகஸ்டு மாதம் தொடங்க வாய்ப்பு

சிவகாசி, சாட்சியாபுரம் ரெயில்வே மேம்பால பணி ஆகஸ்டு மாதம் தொடங்க வாய்ப்புள்ளது என அசோகன் எம்.எல்.ஏ. கூறினார்.

Update: 2023-06-30 19:39 GMT

சிவகாசி, 

சிவகாசி, சாட்சியாபுரம் ரெயில்வே மேம்பால பணி ஆகஸ்டு மாதம் தொடங்க வாய்ப்புள்ளது என அசோகன் எம்.எல்.ஏ. கூறினார்.

பாலம் கட்டும் பணி

சிவகாசி காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசோகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

சிவகாசி சாட்சியாபுரம் பகுதியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க பல்வேறு தரப்பினர் கடந்த 10 ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறார்கள். தற்போது பாலம் அமைக்க தேவையான முதல் கட்ட பணிகள் 90 சதவீதம் முடிந்து விட்டது.

இன்னும் 10 சதவீத பணிகள் முடிக்கப்பட்டு வருகிற ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் பாலம் கட்டும் பணி தொடங்க வாய்ப்பு இருக்கிறது. பாலம் அமைக்கும் பணி தொடங்கினால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படும். எனவே இருசக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு தனி பாதையும், கனரக வாகனங்கள் செல்ல தனி பாதையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தீப்பெட்டி தொழில்

அந்த பாதைகள் முடிவு செய்யப்பட்டவுடன் இதுகுறித்து முறையான அறிவிப்பு வெளிவரும். சிவகாசி மாநகராட்சி அலுவலகம் முன்பு தொடங்கும் ரெயில்வே பாலம் ஆசாரி காலனி நுழைவுப்பகுதியில் முடியும். ஒரு வருடத்தில் பாலம் கட்டுமான பணி முடிந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். தீப்பெட்டி தொழிலை பாதுகாக்க வேண்டும் என சட்டசபையில் நான் பேசினேன்.

அப்போது 20 ரூபாய்க்கு கீழ் உள்ள லைட்டர்களை தடை செய்ய வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்தேன். தற்போது அது நடந்துள்ளது. மத்திய அரசு அந்த தடையை வைத்துள்ளது. இந்த தடையின் மூலம் தீப்பெட்டியின் விற்பனை அதிகரிக்கும்.

கொல்லம் ரெயில்

சிவகாசி பகுதியில் தீப்பெட்டி தொழில் தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் ஆகிறது. அதனை கவுரவிக்கும் வகையில் புவிசார் குறியீடு பெற முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.

சென்னையில் இருந்து கொல்லம் செல்லும் எக்ஸ்பிரஸ் ெரயில் சிவகாசியில் கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தப்படாமல் சென்றது. பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பின்னர் தற்போது கொல்லம் எக்ஸ்பிரஸ் சிவகாசியில் நிறுத்தப்படும் என மத்திய ரெயில்வே துறை அறிவித்துள்ளது. இது இப்பகுதி மக்களின் கூட்டுப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்