தனியார் பஸ் மோதி ரெயில்வே ஊழியர் பலி
திருச்சியில் தனியார் பஸ் மோதி ரெயில்வே ஊழியர் பலியானார். திருமணமான 10 மாதத்தில் இந்த பரிதாப சம்பவம் நடைபெற்றுள்ளது.
திருச்சியில் தனியார் பஸ் மோதி ரெயில்வே ஊழியர் பலியானார். திருமணமான 10 மாதத்தில் இந்த பரிதாப சம்பவம் நடைபெற்றுள்ளது.
பஸ் மோதி விபத்து
திருச்சி ஜங்ஷன் ரெயில்வே காலனியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் மோகன் (வயது 35). ரெயில்வே ஊழியரான இவருக்கு திருமணமாகி 10 மாதங்கள் ஆகிறது. இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். நேற்று காலை 6.40 மணி அளவில் மோகன் ரெயில்வே காலனியில் இருந்து பாரதியார்சாலையில் உள்ள முனீஸ்வரன் கோவில் அருகே தண்ணீர் பிடிப்பதற்காக குடத்துடன் வந்தார்.
தண்ணீர் பிடித்து கொண்டு சாலையை கடந்து ஓரமாக சென்று கொண்டு இருந்தார். அப்போது, தலைமை தபால் நிலையத்தில் இருந்து ஜங்ஷன் நோக்கி தனியார் பஸ் ஒன்று வேகமாக சென்று கொண்டு இருந்தது. அங்குள்ள பள்ளி அருகே அமைக்கப்பட்டு இருந்த வேகத்தடையில் ஏறிய அந்த பஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் சென்ற மோகன் மீது மோதியது.
ரெயில்வே ஊழியர் பலி
இதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். பின்னர் அந்த பஸ் நிற்காமல் சாலையோரம் இருந்த இரும்புகம்பத்தை இடித்து தள்ளி, அங்குள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பு நின்ற மற்றொரு தனியார் பஸ்சின் பக்கவாட்டில் இடித்தது. தொடர்ந்துஅந்த பஸ் அங்கு இருந்த தடுப்பு கட்டையில் மோதி நின்றது. இந்த விபத்தை கண்டு ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் ஓடி வந்து பஸ் டிரைவர் சுந்தர்ராஜன் பிடித்து சரமாரியாக தாக்கி, பஸ்சின் கண்ணாடியையும் அடித்து நொறுக்கினர்.
தகவல் அறிந்த தெற்கு போக்குவரத்து புலனாய்வுபிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விபத்தில் இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பஸ் டிரைவர் மதுபோதையில் இருந்ததால் விபத்து நடந்ததா? அல்லது வேறு ஏதும் காரணமா? என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.