அடிப்படை வசதிகளுக்காக ஏங்கும் மொரப்பூர் ரெயில் நிலையம்

மொரப்பூர் ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை நிைறவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Update: 2022-10-01 18:45 GMT

மொரப்பூர், அக்.2-

மொரப்பூர் ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை நிைறவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

பழமைவாய்ந்த ரெயில் நிலையம்

தமிழகத்தின் பழமைவாய்ந்த ரெயில் நிலையங்களின் ஒன்றான மொரப்பூர் ரெயில் நிலையம் ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் கடந்த 1861-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த ரெயில் நிலையத்தின் வழியாக சென்னை, திருப்பதி, ஐதராபாத், மும்பை, கோவை, கேரள மாநிலங்களின் பல்வேறு பகுதிகளுக்கு ரெயில்கள் சென்று வருகின்றன.

இரு வழி இருப்பு பாதையுடன் கூடிய மின்சார ரெயில் வழித்தடமான மொரப்பூர் வழியாக சரக்கு ரெயில்கள், பயணிகள் ரெயில்கள், எக்ஸ்பிரஸ் ரெயில்கள் என தினந்தோறும் 90 ரெயில்கள் சென்று வருகின்றன. அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், வணிகர்கள், தொழிலாளர்கள் உள்பட சுமார் 5 ஆயிரம் பேர் தினமும் மொரப்பூர் ரெயில் நிலையம் வழியாக பல்வேறு ஊர்களுக்கு சென்று வருகிறார்கள்.

அடிப்படை வசதிகள்

அதிக ரெயில்கள் போக்குவரத்து மற்றும் ரெயில் பயணிகள் பயன்பாடு உள்ள மொரப்பூர் ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் போதிய அளவில் ஏற்படுத்தவில்லை. ரெயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு இங்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

ஏற்கனவே உள்ள அடிப்படை வசதிகள் முறையாக பயன்பாட்டில் இருப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ரெயில் நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

கூடுதல் டிக்கெட் கவுண்ட்டர்

இதுதொடர்பாக ரெயில் பயணிகள், பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ரெயில் பயணிகள் நல சங்கத்தை சேர்ந்த சென்னகிருஷ்ணன்:- மொரப்பூர் ரெயில் நிலையத்திற்கு தினந்தோறும் வரும் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதுமான அளவில் ரெயில் நிலைய வளாகத்தில் கழிப்பறை வசதி இல்லை. பிளாட்பாரத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களில் அவ்வப்போது குடிநீர் வருவதில்லை. ரெயில் நிலையத்தில் பெண் பயணிகளுக்கு கூடுதல் கழிப்பிட வசதி ஏற்படுத்த வேண்டும். ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள கழிப்பிட வளாகங்கள் பல நேரங்களில் மூடி வைக்கப்பட்டுள்ளன. இவை எப்போதும் பயன்பாட்டில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

வணிகர் சங்க நிர்வாகி முத்து:- மொரப்பூர் ரெயில் நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் டிக்கெட் கவுண்ட்டர்களில் கூட்டம் அதிகரித்துள்ளது.

பயணிகள் காத்திருப்பு அறை

இந்த நிலையில் ஏற்கனவே செயல்பட்டு வந்த 2 டிக்கெட் கவுண்ட்டர்களில் ஒன்றை மூடிவிட்டனர். இதனால் பயணிகள் டிக்கெட் பெற கவுண்ட்டர்களில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. ரெயில் நிலையத்திற்கு அடுத்தடுத்து ரெயில்கள் வரும்போது உரிய நேரத்தில் டிக்கெட்டை பெற்று விட வேண்டும் என்று பயணிகள் ஒருவித பதற்றத்துடன் சென்று வருகின்றனர்.

எனவே கூடுதல் டிக்கெட் கவுண்ட்டர்களை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மொரப்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு செல்ல முன்பதிவு செய்துள்ள ரெயில் பயணிகள் காத்திருப்பதற்கான ஓய்வு அறை பெரும்பாலான நேரம் பூட்டியே வைக்கப்பட்டுள்ளது. இந்த அறையை எப்போதும் திறந்து வைக்க வேண்டும்.

மேற்கூரை வசதி

செட்ரப்பட்டியைச் சேர்ந்த பிருந்தா:- மொரப்பூர் ரெயில் நிலையத்திற்கு பல்வேறு ஊர்களில் இருந்து இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் வாகனங்களை நிறுத்தும் இடத்தில் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு சென்று வருகின்றனர். ஆனால் இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்திற்கு மேற்கூரை வசதி இல்லாததால் இங்கு நிறுத்தப்படும் வாகனங்கள் வெயில், மழை ஆகிய சூழல்களில் வெட்ட வெளியில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதை கருத்தில் கொண்டு வாகனம் நிறுத்தும் இடத்திற்கு மேற்கூரை அமைக்க வேண்டும். மொரப்பூர் ரெயில் நிலையத்தில் அண்மையில் திறக்கப்பட்ட பூங்கா தொடர்ந்து மூடி வைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். பகல் நேரத்தை விட இரவு நேரத்தில் ரெயில் நிலையம் வழியாக அதிகளவில் ரெயில்கள் சென்று வருகின்றன. இதனால் இரவு நேரத்தில் பெண் பயணிகள் வருகை அதிகளவில் உள்ளது. எனவே பெண் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்