திருநின்றவூர் அருகே தண்டவாளத்தில் விரிசல்; எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாமதம்

திருநின்றவூர் அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாமதம் ஏற்பட்டது. இதனால் அதில் இருந்த பயணிகள் அவதி அடைந்தனர்.

Update: 2023-08-23 21:33 GMT

திருநின்றவூர்,

சென்னை சென்டிரல் நோக்கி நேற்று அதிகாலை போடிநாயக்கனூரில் இருந்து எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது. ஆவடியை அடுத்த திருநின்றவூர்-நெமிலிச்சேரி ரெயில் நிலையங்களுக்கு இடையே காலை 7.30 மணியளவில் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது.

முன்னதாக அதற்கு முன்னால் சென்னை சென்டிரல் நோக்கி சென்ற மற்றொரு ரெயிலின் என்ஜின் டிரைவர், திருநின்றவூர் ரெயில்வே மேம்பாலம் அருகே எக்ஸ்பிரஸ் ரெயில்கள் செல்லும் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு இருப்பதாக ரெயில்வே அதிகாரிகளுக்கு தெரிவித்தார்.

எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நிறுத்தம்

உடனடியாக இதுபற்றி அதற்கு பின்னால் சென்னை நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜின் டிரைவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் போடிநாயக்கனூர் எக்ஸ்பிரஸ் ரெயில் திருநின்றவூர் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

அதேபோல் சென்னை நோக்கி வந்த ஜோலார்பேட்டை எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரெயில்களும் நடுவழியில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதையடுத்து ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்ட பகுதியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். காலை 8.40 மணியளவில் தண்டவாள விரிசலை சரி செய்தனர்.

பயணிகள் அவதி

அதன்பிறகு ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த எக்ஸ்பிரஸ் ரெயில்கள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக சென்னை நோக்கி புறப்பட்டு சென்றன. தண்டவாள விரிசல் ஏற்பட்ட பகுதியில் மட்டும் மெதுவாக இயக்கப்பட்டன. சுமார் ஒரு மணிநேரம் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் அதில் இருந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். சென்னையில் இருந்து அரக்கோணம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் வழி தடத்திலோ, மின்சார ரெயில் சேவையிலோ எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. சரியான நேரத்தில் தண்டவாள விரிசல் கண்டுபிடிக்கப்பட்டு சீரமைக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்