அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை எதிரொலி: தலைமைச்செயலகத்தில் போலீஸ் பாதுகாப்பு தீவிரம்

அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத் துறையினர் மேற்கொள்ளும் சோதனை எதிரொலியாக சென்னை தலைமைச் செயலகத்தில் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Update: 2023-07-17 23:58 GMT

சென்னை,

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் கடந்த ஜூன் மாதம் 13-ந் தேதி அமலாக்கத் துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். ஆனால் யாரும் எதிர்பார்க்காத சூழ்நிலையில் வங்கி அதிகாரிகளை அழைத்துக் கொண்டு, தலைமைச் செயலகத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் அலுவலகத்திற்கு அமலாக்கத் துறையினர் வந்து சோதனை மேற்கொண்டனர்.

தலைமைச் செயலகத்திற்குள் நுழைந்து, சோதனைக்கான அனுமதியை அரசு அதிகாரிகளிடம் அமலாக்கத் துறையினர் கோரிய பிறகுதான், அரசுக்கே சோதனை விவரம் தெரிய வந்தது. அந்த அலுவலகத்தில் மறுநாள் அதிகாலை 2 மணி வரை சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் கம்ப்யூட்டர், அலமாரிகள், மேஜை உள்பட எந்த இடத்தையும் விடாமல் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அமைச்சர் அலுவலக ஊழியர்கள் அங்கு இருந்ததால் பல்வேறு தகவல்களை அவர்களிடம் இருந்து அமலாக்கத் துறையினர் பெற்று சோதனை நடத்தினர். சோதனைக்கு பின்னர் சில ஆவணங்களை அவர்கள் கைப்பற்றி சென்றனர்.

தலைமைச்செயலகத்தில் பாதுகாப்பு

இந்த சோதனை முடிந்து ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில் நேற்று காலையில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்த வந்தனர். இந்தத் தகவல் காலையில் வெளி வந்துவிட்டது. எனவே தலைமைச் செயலகத்தில் பாதுகாப்புப் பணியில் உள்ள போலீசாருக்கு சிறப்பு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

தலைமைச் செயலகத்தின் நுழைவு வாயில்களில் பாதுகாப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், அங்கு கார்களில் வருவோர் யார் என்பதை அறிந்த பின்னரே அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதுபோல மோட்டார் சைக்கிளில் வருவோர், நடந்து வருவோரில் வழக்கமாக வருவோர் தவிர புதிதாக யார் வந்தாலும் அவர் யார்? எங்கிருந்து வருகிறார்? என்ற விவரங்களோடு, அடையாள அட்டையையும் கேட்டு பார்வையிட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. மேலும் அமலாக்கத் துறையினர் வந்தால் அதுபற்றிய தகவல் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு உடனே அளிக்கப்பட வேண்டும் என்று ஆணையிடப்பட்டது.

இடம் மாறிவிட்டன

எனவே நேற்று தலைமைச் செயலகத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் தீவிரமாக செயல்பட்டனர். அனைவரையும் கண்காணித்த பிறகே தலைமைச் செயலகத்திற்குள் அனுமதித்தனர். ஆனால் நேற்று பிற்பகல் வரை அமலாக்கத் துறையினர் அங்கு வரவில்லை.

அதோடு, தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் பொன்முடியின் அலுவலக கதவுகளும் நீண்டநேரம் மூடப்பட்டு இருந்தன. அங்கு பணியாற்றும் யாரையும் அந்த பக்கம் பார்க்க முடியவில்லை.

தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அலுவலகத்தில் சோதனை நடந்து முடிந்த பிறகு, பெரும்பாலான முக்கிய அலுவலகங்களில் இருந்த சில ஆவணங்களும், கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு இருந்த சில தகவல்களும் மறுநாளிலேயே இடம் மாற்றப்பட்டுவிட்டதாக அந்த வட்டாரத்தில் கூறப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்