கரூரில் வளர்ந்த நாய் குட்டியை ஆசையாக வாங்கிய ராகுல்காந்தி

கரூரில் வளர்ந்த நாய் குட்டியை ஆசையாக வாங்கிய ராகுல்காந்தி வாங்கின

Update: 2023-08-24 18:28 GMT


கரூர் சின்னாண்டாங்கோவில் எல்.பி.ஜி. நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவர் ஜவுளி ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். மேலும் நாய்கள் வளர்ப்பதில் ஆர்வம் கொண்டவர். இவர் வெளிநாட்டு நாய்களை இறக்குமதி செய்து வளர்த்து விற்பனை செய்து வருகிறார். ரஷியாவின் ஜாக் ரசல் டெரியர் என்ற வகை நாய்களில் 2 ஜோடி ஆண் மற்றும் பெண் நாய்களை 10 ஆண்டுகளுக்கு முன்பு இறக்குமதி செய்தார். அவை ஈன்ற குட்டிகளை வளர்த்து விற்பனை செய்து வருகிறார். இந்த வகை நாய்கள், குடும்ப உறுப்பினர்களிடம் எளிதில் பழகி கொள்ளும். எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும். இதனால் பலரும் ஆர்வமாக வாங்கி செல்கின்றனர். இந்த வகை நாய்கள் குறித்த தகவல்களை வலைத்தளங்களில் அவர் வெளியிட்டார். இந்நிலையில் சரவணனை, தொடர்பு கொண்ட ஒரு குழுவினர் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கு இந்த வகை நாய் குட்டி வேண்டும் என கூறியுள்ளனர். பின்னர் கரூரில் உள்ள சரவணன் அலுவலகத்திற்கு வந்து நாய் குட்டியின் வளர்ப்பு முறை குறித்து கேட்டறிந்தனர். பின்னர் ராகுல்காந்தி எம்.பி. கேரளா வந்தபோது அவரை பார்க்க ஏற்பாடு செய்தனர்.

இதையடுத்து ஜாக் ரசல் டெரியர் வகை நாயின் 3 குட்டிகளுடன் சரவணன், ராகுல்காந்தியை சந்தித்து உள்ளார். அப்போது ராகுல்காந்தி 3 குட்டிகளில் ஒரு நாய் குட்டியை தேர்வு செய்தார். அப்போது அந்த நாய் குட்டி பிறந்து 40 நாட்கள் ஆகியிருந்தது. இதனால் மீண்டும் அந்த நாய் குட்டி கரூருக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் 60 நாட்கள் ஆன பிறகு அதை டெல்லிக்கு எடுத்து சென்று ராகுல்காந்தி வீட்டில், அவரிடம் சரவணன் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து சரவணன் கூறுகையில், இந்த வகை நாய்கள் குடும்ப உறுப்பினர்களிடம் எளிதாக பழகும். இதனால் பலரும் ஆர்வமாக வாங்கி செல்கிறார்கள். நான் வளர்த்த நாய் குட்டியை ராகுல்காந்தி ஆசையாக பெற்றுக்கொண்டார். அந்த தருணம் மகிழ்ச்சிகரமாக இருந்தது, என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்