பவானியில் நடந்த ரேக்ளா பந்தயத்தில் சீறிப்பாய்ந்த குதிரைகள்

பவானியில் நடந்த ரேக்ளா பந்தயத்தில் குதிரைகள் சீறிப்பாய்ந்தன.

Update: 2022-08-14 23:26 GMT

பவானி

பவானியில் நடந்த ரேக்ளா பந்தயத்தில் குதிரைகள் சீறிப்பாய்ந்தன.

சீறிப்பாய்ந்த குதிரைகள்

பவானி ஜம்பை மெயின் ரோட்டில் உள்ள காடையாம்பட்டி அருகே, நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் பவானி செவலை நண்பர்கள் சார்பில் நேற்று காலை ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ. கொடி அசைத்து பந்தயத்தை தொடங்கி வைத்தார்.

அப்போது குதிரைகள் ரோட்டில் சீறிப்பாய்ந்து சென்றது. இதனை ரோட்டோரம் நின்று ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர். முதலில் உள்ளூர் குதிரைகளுக்கு பவானியில் இருந்து பெரிய மோளபாளையம் வரை போட்டி நடைபெற்றது. சிங்காரவேலன் என்பவரின் குதிரையான கற்பக விநாயகர் குதிரை முதலிடத்தை பிடித்து ரூ.10 ஆயிரத்தையும், விநாயகா ஆம்புலன்ஸ் சுரேஷ் என்பவரின் வீரமாத்தி துணை என்ற குதிரை 2-வது இடத்தை பிடித்து ரூ.8ஆயிரத்தையும், சிங்காரவேல் என்பவரின் குதிரை கற்பக விநாயகர் துணை 3-வது இடத்தை பிடித்து ரூ.6 ஆயிரத்தையும் வென்றது.

புதிய குதிரைகளுக்கான போட்டி

பின்னர் பந்தயம் தொடங்கும் இடத்தில் இருந்து பெரிய மோளபாளையம் வரை புதிய குதிரைகளுக்கான போட்டி நடந்தது. இதில் அன்னூர் மூர்த்தி என்ற குதிரை முதலிடத்தை பிடித்து ரூ.15 ஆயிரத்தையும், பத்ரகாளியம்மன் துணை கோவை சரவணன் 2-வது இடத்தை பிடித்து ரூ.10 ஆயிரத்தையும், சிங்காரவேல் கற்பக விநாயகர் துணை 3-வது இடத்தை பிடித்து ரூ.8ஆயிரத்தையும் பெற்றது.

இதேபோல் பந்தய மைதானத்தில் இருந்து தளவாய் பேட்டை வரை போட்டி நடந்தது. இதில் கற்பக விநாயகர் துணை என்ற குதிரை முதலிடத்தை பிடித்து ரூ.20 ஆயிரத்தையும், உறையூர் விஜயா 2-வது இடத்தை பிடித்து ரூ.15 ஆயிரத்தையும், சிங்காரவேலின் கற்பக விநாயகர் துணை 3-வது இடத்தை பிடித்து ரூ.10 ஆயிரத்தையும் பெற்றது.

பரிசுகள்

அதைத்தொடர்ந்து பெரிய குதிரைகளுக்கான போட்டி நடந்தது.

இதில் பந்தய மைதானத்திலிருந்து ஒரிச்சேரிப்புதூர் வரை 10 கிலோமீட்டர் தொலைவு காண நடைபெற்ற போட்டியில் முதல் பரிசை ஈரோடு சரவணன் நேஷனல் பவானி என்ற குதிரை ரூ.25 ஆயிரம் பரிசையும், அன்னூர் மூர்த்தி குரூப் என்ற குதிரை ரூ.20 ஆயிரம் பரிசையும், பண்ணாரி அம்மன் துணை கோவை கணேஷ் என்பவரின் குதிரை ரூ.15 ஆயிரம் பரிசையும் தட்டி சென்றது.

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு செவலை நண்பர்கள் சார்பில் பரிசு பொருட்கள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்