வினாத்தாள் குளறுபடி: சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற இருந்த தேர்வு ஒத்திவைப்பு

சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று காலை நடைபெற இருந்த தமிழ் தேர்வு வினாத்தாள் குளறுபடியால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Update: 2022-11-18 09:11 GMT

சென்னை,

சென்னை பல்கலைக்கழகத்திற்குட்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்ற அனைத்து தனியார் கலை அறிவியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு துவங்கி நடந்து வருகிறது.

இந்நிலையில் இன்று இளங்கலை மாணவர்களுக்கான 3-வது செமஸ்டர் தமிழ் தேர்வு இன்று காலை நடைபெற இருந்த நிலையில் மாணவர்கள் அனைவரும் தேர்வு அறைக்கு சென்ற பின் அவர்களுக்கு வினாத்தாள் வழங்கப்பட்டது.

இதையடுத்து 4-வது செமஸ்டர் தமிழ் தேர்வுக்கான வினாத்தாளை, இன்று 3-வது செமஸ்டர் தேர்வெழுத சென்ற மாணவர்களுக்கு வழங்கப்பட்டதால் மாணவர்கள் திகைத்து போயினர். அடுத்த முறை எழுத வேண்டிய தேர்வுக்கான கேள்வித்தாள் முன்கூட்டிய வழங்கப்பட்டதால் மாணவர்கள் அதிர்ச்சிக்குள்ளானார்கள்.

மேலும் தேர்வில் நடைபெற்ற குளறுபடிகள் குறித்து கல்லூரிகள் தரப்பில் பல்கலைக் கழகத்திற்குத் தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து அந்த தேர்வு ரத்து செய்யப்படுவதாகச் சென்னை பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. மேலும் மாற்றுத் தேதி அறிவிக்கப்பட்டு, மீண்டும் அந்த தேர்வு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்