தீபாவளி பண்டிகையையொட்டி நெல்லையில் கதர் சிறப்பு தள்ளுபடி விற்பனை- கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார்
தீபாவளி பண்டிகையையொட்டி, நெல்லையில் கதர் சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார்.
தீபாவளி பண்டிகையையொட்டி, நெல்லையில் கதர் சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார்.
சிறப்பு தள்ளுபடி விற்பனை
நெல்லை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை மற்றும் தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியம் சார்பில் மகாத்மா காந்தி பிறந்த நாள் விழா, நெல்லை பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கம் அருகில் உள்ள கதர் கிராம உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கி, காந்தியின் உருவப்படத்தை திறந்து வைத்து மரியாதை செலுத்தினார். மேலும் தீபாவளி பண்டிகை கால கதர் சிறப்பு தள்ளுபடி விற்பனையையும் தொடங்கி வைத்தார். முதல் விற்பனையை சாராள் தக்கர் கல்லூரி பேராசிரியை ரமா பெற்று கொண்டார்.
பின்னர் கலெக்டர் விஷ்ணு கூறியதாவது:-
உதவித்தொகை
கிராமப்புற ஏழை, எளிய மக்களுக்கு ஆண்டு முழுவதும் வாழ்வளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியம் தொடங்கப்பட்டது. இந்த வாரியத்தின் கீழ் பாளையங்கோட்டையில் கதர் அங்காடி, காலணி உற்பத்தி மையம், பேட்டையில் தச்சு கொல்லு உற்பத்தி மையம், வீரவநல்லூரில் 5 கைத்தறிகள் இயங்கி வருகிறது.
காந்தியின் கொள்கையை கடைபிடித்து இந்த துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால பராமரிப்பு உதவித்தொகையாக 437 குடும்பங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
கதர் விற்பனை நிலையங்கள்
வருகிற தீபாவளி பண்டிகை வரையிலும் கலெக்டர் அலுவலகம், யூனியன், நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்கள், அரசு ஆஸ்பத்திரி வளாகங்களில் தற்காலிகமாக கதர் விற்பனை நிலையங்கள் செயல்படும்.
மேலும் தரமான அசல் வெள்ளி ஜரிகையால் நெய்யப்பட்ட பட்டு சேலைகள், கதர் வேட்டிகள், துண்டு, சட்டைகள், மெத்தை, தலையணைகள், கதர் பட்டு ரகங்கள் மற்றும் அக்மார்க் தேன், குளியல் சோப்பு, சாம்பிராணி, பூஜை பொருட்கள், பனை வெல்லம், பனை பொருட்கள் போன்றவையும் விற்பனை செய்யப்படும். கதர் துணிகளுக்கு 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அரசு ஊழியர்களுக்கு 10 மாத கடன் தவணை அடிப்படையில் கதர் ரகங்கள் விற்பனை செய்யப்படும்.
ரூ.46.25 லட்சம் விற்பனை இலக்கு
நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டு ரூ.44.87 லட்சம் கதர் விற்பனையும், ரூ.17.56 லட்சம் இதர பொருட்கள் விற்பனையும் செய்யப்பட்டது. இந்த ஆண்டுக்கு ரூ.46.25 லட்சம் விற்பனை இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
நெசவாளர்களின் வாழ்வாதாரம் சிறக்க கதர் துணிகளை பொதுமக்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வாங்கி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ செல்லையா, பாளையங்கோட்டை தாசில்தார் ஆனந்த பிரகாஷ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெயஅருள்பதி, கதர் துறை கண்காணிப்பாளர் மாரிமுத்து, மேலாளர் ராமகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.