செஞ்சேரிமலையில் ரூ.83 லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் கொள்முதல்
செஞ்சேரிமலையில் ரூ.83 லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது.
சுல்தான்பேட்டை
செஞ்சேரிமலையில் ரூ.83 லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது.
கொப்பரை தேங்காய்
சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் தென்னை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. அரசு கொள்முதல் மையத்தை விட காங்கயம், வெள்ளக்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வெளிமார்க்கெட்டில் கொப்பரை தேங்காய் கொள்முதல் விலை குறைவாக உள்ளதால் விவசாயிகள் அரசு கொள்முதல் மையத்தில் தங்கள் கொப்பரை தேங்காயை விற்பனை செய்ய தொடர்ந்து ஆர்வம் காட்டுகின்றனர். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந்தேதி செஞ்சேரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல் தொடங்கி, அக்டோபர் மாதம் 31 -ந்தேதி நிறுத்தப்பட்டது. அப்போது அரவை கொப்பரை கிலோ ரூ.105.90-க்கும், பந்து கொப்பரை கிலோ ரூ.110-க்கும் கொள்முதல் செய்யப்பட்டது.
ரூ.83 லட்சம்
இந்த நிலையில் தற்போது வெளிமார்க்கெட்டில் கொப்பரை கொள்முதல் கடுமையாக விலை சரிந்துள்ளது. இந்த நிலையில் செஞ்சேரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அரசு உத்தரவின்படி கடந்த 1-ந்தேதி கொப்பரை தேங்காய் கொள்முதல் மீண்டும் தொடங்கி, வருகிற செப்டம்பர் மாதம் வரை நடக்கிறது. தற்போது, அரவை கொப்பரை தேங்காய் கிலோ ரூ.108-60-க்கும், பந்து கொப்பரை தேங்காய் கிலோரூ.117.50-க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு 291 கிலோ கொப்பரை கொள்முதல் செய்யப்படுகிறது.
கொள்முதல் மையத்தில் கொப்பரை விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், ஆதார் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகம் நகல் ஆகிய ஆவணங்களை கொண்டு சென்று ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் முன்பதிவு செய்து வருகின்றனர். நேற்று வரை 63 விவசாயிகளிடம் இருந்து தலா 50 கிலோ எடை கொண்ட 1,530 மூட்டை கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.83 லட்சத்து 7 ஆயிரத்து 900 ஆகும். அனைத்து வேலைநாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை கொள்முதல் நடைபெறும் என ஒழுங்குமுறை விற்பனை கூடமேற்பார்வையாளர் இசாக் தெரிவித்தார்.