புன்னம் மாரியம்மன் கோவில் தேரோட்டம்

புன்னம் மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Update: 2023-04-18 18:54 GMT

மாரியம்மன் கோவில்

கரூர் மாவட்டம், புன்னம் பகுதியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் ேகாவில் உள்ளது. இக்கோவிலில் தேர் திருவிழாவை கடந்த 3-ந்தேதி சிறப்பு அபிஷேகத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து சாட்டுதல் நிகழ்ச்சியும், 15-ந்தேதி வரை அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேகமும் நடைபெற்று வந்தது.

16-ந்தேதி வடிசோறு நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று முன்தினம் பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்து கொண்டு மேள தாளம் முழக்க ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.

தேரோட்டம்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை மாரியம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்பட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் காலை 11 மணி அளவில் உற்சவர் அம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார்.

பின்னர் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டம் நடைபெற்றது. தேர் முக்கிய வீதிகள் வழியாக வந்து நிலையை வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.

காலையில் கிடா ய்வெட்டு பூஜை நடந்தது.

நேர்த்திக்கடன்

மாலையில் திரளான பெண்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்து வந்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இரவு வாணவேடிக்கை நடந்தது. தேரோட்டத்தையொட்டி வேலாயுதம்பாளையம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இன்று (புதன்கிழமை) காலை கம்பம் பிடுங்கி காவிரி ஆற்றில் விடும் நிகழ்ச்சியும், தொடர்ந்து மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்