கந்தலான லக்கிநாயக்கன்பட்டி சாலையால் பஞ்சராகும் வாகனங்கள்

கந்தலான சாலையால் வாகனங்கள் பஞ்சராவதால் கிராம மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

Update: 2023-10-13 18:45 GMT

வாணாபுரம்:

சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மணலர், பவுஞ்சிப்பட்டு பகுதியில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கிருந்து லக்கிநாயக்கன்பட்டி செல்ல சாலை உள்ளது. 6 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த சாலையை பெரும்பாலும் விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் விளையும் நெல், கரும்பு, மக்காச்சோளம், கேழ்வரகு, மணிலா, உளுந்து உள்ளிட்ட தானியங்களை அறுவடைசெய்து அதனை இவ்வழியாக வாகனங்கள் மூலம் கொண்டு செல்கின்றனர். மேலும் பவுஞ்சிப்பட்டு, மணலூர் பகுதியில் வசிப்பவர்கள் லக்கிநாயக்கன்பட்டி செல்லும் பிரதான சாலையாக இருப்பதால் இவ்வழியாக பள்ளி, கல்லூரி வாகனங்கள் அதிகளவில் சென்று வருகிறது.

பஞ்சராகும் வாகனங்கள்

தார் சாலை அமைத்து 10 வருடங்களுக்கு மேல் ஆகிறது. இதனால் சாலை முழுவதும் குண்டும், குழியுமாகவும் போக்குவரத்திற்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இருப்பினும் வேறு வழியின்றி பெரும்பாலானவர்கள் இரு சக்கர வாகனங்களில் செல்கிறார்கள். அவ்வாறு கந்தலான சாலையில் செல்லும்போது பஞ்சராகி நடுரோட்டில் தவிப்பதையும் காணமுடிகிறது.

சாலையை சீரமைக்க கோரி கிராம மக்கள் மனு கொடுத்தும், அதிகாரிகள் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து சேதமான சாலையை சீரமைத்து தார் சாலை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதே கிராம மக்களின் நீண்டநாள் கோரிக்கை ஆகும். 

Tags:    

மேலும் செய்திகள்