புதுக்கோட்டை ராணி ரமாதேவியின் உடல் தகனம்
மரணமடைந்த புதுக்கோட்டை ராணி ரமாதேவியின் உடல் தகனம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
ராணி ரமாதேவி மரணம்
புதுக்கோட்டை மாவட்டம் நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பு தனி சமஸ்தானமாக இருந்தது. தொண்டைமான் மன்னர்கள் புதுக்கோட்டையை ஆட்சி செய்து வந்தனர். இதில் கடைசி மன்னராக இருந்தவர் ராஜா ராஜகோபால தொண்டைமான். இவரது சகோதரர் ராதாகிருஷ்ணன் தொண்டைமான். இவரது மனைவி ராணி ரமாதேவி (வயது 84). இவர் புதுக்கோட்டை அருகே இச்சடியில் உள்ள அரண்மனையில் வசித்து வந்தார். மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் இவர் ராணி என்றே அழைக்கப்பட்டார்.
இந்த நிலையில் அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று முன்தினம் மதியம் சிகிச்சை பலனின்றி ராணி ரமாதேவி மரணமடைந்தார். அவரது உடல் மருத்துவமனையில் இருந்து புதுக்கோட்டை அருகே உள்ள இச்சடியில் உள்ள அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது உடலுக்கு மாவட்ட கலெக்டர் கவிதா ராமு மற்றும் குடும்பத்தினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
உடல் தகனம்
இதைத்தொடர்ந்து அவரது உடலுக்கு இறுதிச்சடங்கு நேற்று நடைபெற்றது. இதில் ராணி ரமாதேவியின் உடல் அவரது அரண்மனை வளாகத்திலேயே தகனம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு 2-வது மகனான விஜயகுமார் தொண்டைமான் தீ மூட்டினார். முன்னதாக மரணமடைந்த ராணி ரமாதேவியின் மூத்த மகனான ராஜா ராஜகோபால தொண்டைமான் மற்றும் அவரது மனைவியுமான திருச்சி மாநகராட்சி முன்னாள் மேயரான சாருபாலா தொண்டைமான், 2-வது மகனான விஜயக்குமார் தொண்டைமான், மகள் ராஜ்குமாரி ஜானகி மனோஹரி மற்றும் பேரக்குழந்தைகள், மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
முக்கிய பிரமுகர்கள்
இதேபோல் பேக்கரி மஹராஜ் உரிமையாளர் அருண், புவனேஸ்வரி தங்க மாளிகை உரிமையாளர் நடராஜன், சாரதா மோட்டார்ஸ் உரிமையாளர்கள் விஸ்வநாதன், கல்யாண், முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திக் தொண்டைமான், முன்னாள் எம்.பி. பி.வி.ராஜேந்திரன், புதுக்கோட்டை சமஸ்கிருத வித்யாலயா ஓரியண்டல் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.